மாத சம்பள பணத்தை ஏ.டி.எம். இயந்திரங்களில் எடுக்க முடியாமல் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதோடு, 70க்கும் மேற்பட்ட உயிரழிப்புகள் ஏற்பட்டன.
மேலும், வங்கிகளில் பணம் எடுக்க இயலாமையாலும், ஏ.டி.எம். இயந்தியங்களிலும் போதிய பணம் இல்லாததாலும் பொதுமக்கள் தினசரி செலவீனங்களுக்கே அவதிப்பட்டு வருகின்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு, ஏ.டி.எம். மையங்களில் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
வங்கிகளில் சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ.24 ஆயிரம் எடுக்க முடிகிறது. ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் ஏ.டி.எம். மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று, அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடக்கும் நிலையில் திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரூ.2 ஆயிரம் எடுப்பதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையே நீடித்து வருகிறது. ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மட்டும் பணம் ஓரளவுக்கு தாராளமாக கிடைக்கிறது.
இதனால் திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களைத் தேடி மக்கள் அலையும் சூழ்நிலையே இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 1ஆம் தேதி சம்பளம் போடப்பட்டு விட்ட நிலையில், தனியார் நிறுவனங்களும் அடுத்தடுத்த நாட்களில் தங்களது ஊழியர்களுக்கான சம்பள பணத்தை வங்கியில் போட்டுள்ளன.
இந்த பணத்தையும் எடுக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் திணறி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பலர் வாடகை வீடுகளில்தான் குடியிருக்கிறார்கள். இவர்களும் வாடகை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஒரு சிலர் கடனுக்கு வாங்கிவிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுப்பது உண்டு. அவர்களும் அந்த கடன் தொகையை உடனடியாக கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டு பிரச்சினை 2 வாரங்களையும் தாண்டி நீடித்து வருவதால் சிறிய வணிக நிறுவனங்களிலும் ஸ்வைப் மிஷினை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ரூபாய் நோட்டு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள இந்த அவதி எப்போது தீரும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.