சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநிலத்தின் தேர்தல் முடிவு, தேசிய அளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிலையை தோற்றுவித்துள்ளது. 117 எம்.எல்.ஏக்கள் உள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல், 104 எம்.எல்.ஏக்கள் கொண்ட பாஜகவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்த விவகாரம் நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் குமாரசாமி முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனனத்தும் ஒன்றிணையவுள்ளது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர்களும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.