ஏசி இல்லாமல் விமான பயணம்: ஏர் இந்தியாவில் பயணிகள் அவதி!!
திங்கள், 3 ஜூலை 2017 (11:30 IST)
டார்ஜிலிங்லில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்காததால் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
டார்ஜிலிங் அருகில் இருக்கும் பக்தோக்ரா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் ஏசி இயங்கவில்லை. பயணிகள் இது குறித்து கேட்ட போது விமானம் புறப்பட்ட பின்னர் இயங்கத் துவங்கிவிடும் என்று சமாதானம் கூறியுள்ளனர் விமான அதிகாரிகள்.
ஆனால், பயணம் முடியும் வரை ஏசி இயங்கவில்லை. இதனால் காற்று இல்லாமல், புழுக்கம் ஏற்பட்டு பயணிகள் தங்களிடம் இருந்த பேப்பர், கை விசிறி, புத்தகம் போன்றவற்றால் காற்று வீசிக் கொண்டு டெல்லி வந்து சேர்ந்தனர்.
விமானம் டெல்லி வந்தடைந்ததும் பைலட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பயணிகள் விமானத்தை விட்டு இறங்க மறுத்துவிட்டனர்.
மேலும், ஆக்சிஜன் சிலிண்டர் இன்றியும் விமானம் பயணத்திற்கு தயாராகியுள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
பின்னர், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.