மோடியும் ராகுலும் நாட்டுக்கு அச்சுறுத்தல் - மாயாவதி ஆவேசம்

வியாழன், 10 ஏப்ரல் 2014 (15:12 IST)
தேர்தல் பிரச்சாரத்தில், ‘‘மோடி அல்லது ராகுல் பிரதமரானால் நாட்டுக்கு அச்சுறுத்தலாக செயல்படுவார்கள்‘‘ என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆவேசமாக பேசினார்.
Mayawati - Madhya Pradesh
மத்திய பிரதேசம், மொரேனாவில் நேற்று நடந்த கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:- ‘‘பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அல்லது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்த இருவரில் யார் பிரதமர் பொறுப்புக்கு வந்தாலும் நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக செயல்படுவார்கள் என்பதை உறுதியாக கூறுகிறேன். காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும், ராகுல் காந்தியை பிரதமராக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
 
அதே சமயத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு முழு பொறுப்பை ஏற்க வேண்டும். குஜராத் கலவர பிரச்சனையை பொறுத்தவரை, மக்களிடம் மோடிக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடைக்காது. மறுபுறம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மொத்தத்தில் எந்த அனுபவமும் கிடையாது. ராகுல் பிரதமரானால் நாட்டு நிர்வாக விவகாரங்களை கையாள்வதில் நம்பிக்கையாக இருக்க முடியாது.
 
காங்கிரஸ் அல்லது பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்குள்ளேயே அரசியல் நடத்திக் கொள்வார்கள். இருவரும் மாறி மாறி நடத்திய ஆட்சியால் இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் ஏழைகளும், பாமர மக்களும் மேலும் நலிவடைந்துதான் போகின்றனர் என்று மாயாவதி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்