நமக்குள் ஒரு உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உன்னத மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எத்தனையோ உடல் ரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்ள முடிகிறது என்றால் இந்த மகிழ்ச்சி ஒன்றுதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
கருவுற்றிருப்பதை மருத்துவர் உறுதி செய்யும் நேரம்தான் வாழ்க்கையில் நாம் பெற்ற இன்பங்களிலேயே மிக முக்கியமான தருணம் என்று தம்பதிகள் எண்ணுவதும் இயல்பு.
கருவுற்றிருப்பதை அறிந்ததும், எதைச் செய்யலாம், எதை எல்லாம் செய்யக் கூடாது என்று நாம் மாய்ந்து மாய்ந்து பிறரிடம் கேட்பதும், முன் பின் தெரியாதவர்கள் கூட கர்பிணிகளைப் பார்த்ததும் ஆலோசனைகளை அள்ளி வழங்குவதும் வழக்கம்தான்.
இவை எல்லாமே பிறக்கப் போகும் குழந்தையை எண்ணி தாய் அடையும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள்.
நமக்குப் பிடித்தவர்களைப் பார்த்ததும் தாம் கருவுற்றிருப்பதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம், வீட்டில் பெரியவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதே என்ற எச்சரிக்கை என பெண்களை இரண்டு விதமான எண்ணங்கள் பாடுபடுத்தும்.
எது எப்படியிருந்தாலும் நமது மகிழ்ச்சிக்கு அணை போட முடியாமல் சொல்லிவிடுவோம்.
கருவுற்றிருக்கும்போதே, என்ன குழந்தை பிறக்கும், என்ன பெயர் வைக்கலாம், என்ன படிக்க வைக்க வேண்டும், அதன் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டும், நடனம் பயில அனுப்ப வேண்டும், எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்றெல்லாம் மனதில் விவாதம் நடந்து முடிவதும் இயல்பு.
வெறும் மகிழ்ச்சி பற்றியே சொல்லிக் கொண்டு இருக்கிறோமே என்று எண்ண வேண்டாம். தாய் அடையும் அந்த மகிழ்ச்சி தான் குழந்தையின் நலத்திற்கு உரம். எனவே கர்பிணிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 5 மாதம் கடந்த கர்ப்பிணிகள் உங்களது மகிழ்ச்சியை உங்கள் குழந்தையிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் நீங்கள் இருக்கும் மனநிலையை சார்ந்துதான் குழந்தைகளின் குணாதிசயங்கள் அமைகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியினூடே சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.