மும்பையில் தினமும் 55 பேர் காணாமல் போகின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில் நாளுக்குநாள் மக்கள் தொகை பெருகி வருவதைப் போல குற்றங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன.
அதுமட்டுமல்ல, காணாமல் போகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நகரில் 1999ல் மொத்தம் 7,726 பேர் காணாமல் போயினர். 2008ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 20,396 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,794 பேர் பெண்கள். இதன்படி, சராசரியாக தினமும் 55 பேர் வரை காணாமல் போகின்றனர் என்கிறது அந்த அறிக்கை.
காணாமல் போகின்றவர்களில் பெரும்பாலோர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம். இவர்களில் பெண்கள்தான் மிக அதிகம்.
இருப்பினும், இந்த வயதில் காணாமல் போகின்றவர்களில் 85 விழுக்காட்டினர் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றனர். ஆனால் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் காணாமல் போனால் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.
1999ல் இந்த வயதுடைய 1,018 பேர் கண்டு பிடிக்கப்படவில்லை. 2008ல் இது 2,590 ஆக உயர்ந்துள்ளது. மன அழுத்தம், நகர வாழ்க்கையில் உள்ள கடினம், குடும்ப பிரச்னை போன்றவையே காணாமல் போவதற்கு முக்கிய காரணம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.