சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : மிதுனம்!

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சமமான மரியாதையை தரக் கூடிய நீங்கள் மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக்கூடியவர்கள். பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து உடனடி தீர்வு காண்பவர்கள். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்ரன் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வருமானம் உயரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.

மகளுக்கு தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். உங்கள் ராசிநாதனும் சாதகமாக இருப்பதால் பிரச்சனைகள் தீரும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். உங்கள் ராசிக்குள்ளேயே பல மாதங்களாக உட்கார்ந்துக் கொண்டு உங்களைப் பாடாய்படுத்தி வரும் செவ்வாய் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் தலைச் சுற்றல், முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். சகோதர வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

உங்கள் ராசியை குரு பகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் -மனைவிக்குள் கலகம் மூட்டியவர்களை ஒதுக்கித்தள்ளுவீர்கள். வைகாசி மாதத்தில் எதிர்காலத்தை நினைத்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 2இல் கேதுவும், 8இல் ராகுவும் இருப்பதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்து, மாத்திரையும் சாப்பிட வேண்டாம்.

ஆனால் ராசிக்கு 8இல் நிற்கும் ராகுவுடன் 6. 12. 2008 முதல் குருவும் சேர்வதால் வேற்று இனத்தவர்களால் நன்மை உண்டு. கன்னிப்பெண்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வேலை கிடைக்கும். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். ஆடி மாதத்தில் புதிய விலையுயர்ந்த ஆடை, ஆணிகலன்களை வாங்கி சேர்ப்பீர்கள். ஆவணி மாதத்தில் புதிய வாகனம் வாங்குவீர்கள். தள்ளிப்போன சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

ஐப்பசி மாதத்தில் சிறுசிறு விபத்துகள், பிள்ளைகளால் அலைச்சல்கள் ஏற்படும். 18. 12. 08 முதல் 27. 1. 09 முடிய உள்ள காலகட்டங்களில் செவ்வாய் மறைந்து நிற்பதால் மன உளைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், சகோதரருடன் கருத்து மோதல் வந்து நீங்கும். மாணவ-மாணவிகள் விளையாட்டின் போது கவனம் தேவை. விடைகளை எழுதிப் பாருங்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்துகொள்ளவேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். பெரிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கார்த்திகை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது ஏஜென்சியும் எடுப்பீர்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களின் திறமைக்கேற்ப பதவியுயர்வும், சம்பள உயர்வும் உண்டு. கணினி துறையைச் சேர்ந்தவர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

பரிகாரம் :

தஞ்சாவூர்-திருவையாற்றுக்கு போகும் வழியில் உள்ள திருக்கண்டியூரில் வீற்றிருக்கும் அருள்மிகு மங்கைநாயகியம்மை உடனுறை ஸ்ரீவீரட்டானேஸ்வரரை பூரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவியின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள். தடைகள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்