சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : கடகம்!

விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை என்ற கொள்கைகளை கடைப்பிடிக்கும் நீங்கள், மற்றவர்களின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு செயல்பட மாட்டீர்கள். சொன்ன சொல்லைக் காப்பற்றத் துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள் நீங்கள்தான். இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது வரும்.

திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஆனால் சுக்ரன் சாதகமாக இருப்பதால் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இதுவரை மோசமான வீட்டிலிருந்து உங்களை பலவிதங்களிலும் ஆட்டிப்படைத்த செவ்வாய் மே மாதத்திலிருந்து ராசிக்குள் நுழைந்து பயணிக்க உள்ளதால் தண்டச் செலவுகள் விலகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தோருடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். உறுதுணையாக இருப்பார்கள். 21. 08. 08லிருந்து உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். சர்க்கரையின் அளவு குறையும். பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வீர்கள். கணவன் -மனைவிக்குள் மனம்விட்டுப்பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும்.

உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் இந்த வருடம் முழுக்க வக்ரமில்லாமல் இருப்பதால் பிள்ளைகள் உங்களின் கனவுகளை நனவாக்குவார்கள். நவம்பர், மார்ச் மாதத்தில் மகனுக்கு அயல்நாட்டில் கூடுதல் சம்பளத்துடன் வேலை கிடைக்கும். மகளுக்கும் நல்ல இடத்தில் வரன் அமைந்து சிறப்பாக திருமணத்தை முடிப்பீர்கள். 08. 05. 08 முதல் 04. 09. 08 முடிய உள்ள காலத்தில் குரு வக்ரமாவதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள், மருத்துவச் செலவுகள் ஆகியன வந்து நீங்கும்.

05. 12. 2008 வரை குரு உங்கள் ராசிக்கு ஆறில் மறைந்திருப்பதால் கையில் காசு தங்காமல் போகும். முடிந்த வரை தண்டச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். 06. 12. 2008 முதல் குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். கன்னிப் பெண்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். குடும்ப பாரத்தைக் குறைப்பீர்கள். திருமணம் நீங்கள் நினைத்த படி நடக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கௌரவப் பதவிகள் வரும். டிரஸ்ட், சங்கம் இவற்றில் சேருவீர்கள். குடும்பத்தில் அமைதி தங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

மாணவ-மாணவியர்களின் நினைவாற்றல் பெருகும். கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். கணிதப் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். 11. 08. 08 முதல் பழைய பாக்கிகள் வசூலாகும். சரக்குகள் உடனுக்குடன் விற்றுத் தீரும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வார்கள். உத்யோகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் புதிய வாய்ப்புகள், சலுகைகள் கிடைக்கும். சகஊழியர்கள் மத்தியில் உயரதிகாரியை விமர்சனம் செய்ய வேண்டாம். கணினி துறையினர்களுக்கு கண் எரிச்சல், கழுத்துவலி நீங்கும். சம்பளம் உயரும். கலைத்துறையினர்களுக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம் :

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடியில் (நண்டானுர்) அருள்பாலிக்கும் ஸ்ரீஅருமருந்துநாயகியம்மன் உடனுறை ஸ்ரீகற்கடேஸ்வரரை பூராடம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்