சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : சிம்மம்!

ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படும் நீங்கள், எப்போதும் மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பாரம்பரியத்தை மதித்து செயல்படக் கூடியவர்கள். உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் குருவும், 6ஆம் வீட்டில் ராகுவும், 8ஆம் வீட்டில் சுக்ரனும், 11ஆம் வீட்டில் செவ்வாயும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடன் தீரும், வருமானம் உயரும், இழந்தப் புகழ், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ராசிக்குள்ளே சனி நிற்பதால் உடல் நலத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துங்கள்.

06. 12. 2008 முதல் குரு பகவான் 6ஆம் வீட்டில் மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்ல இருப்பதால் இந்த வருடம் முழுக்க உங்களின் வெற்றிப் பயணம் தொடரும். இடைவிடாது உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது குடும்பத்துடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் அவ்வப்போது தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனி ஏற்பாடாகும். கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அடிக்கடி வருந்தினீர்களே! இனி அவர்களின் வருங்காலத்திற்கான பாதையை அமைத்துக் கொடுப்பீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். அரைகுறையாக நின்றுபோன கட்டிடவேலைகளையும் முடிப்பீர்கள்.

22. 06. 08 முதல் 11. 08. 08 முடிய உள்ள காலகட்டங்களில் செவ்வாய் உங்கள் ராசிக்குள் பகைக்கோளான சனியுடன் சேர்ந்து நிற்பதால் தலைச்சுற்றல், விபத்து, வீண் சந்தேகம், குழப்பம் வந்துபோகும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

கார்த்திகை மாதத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியவாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். ஐப்பசி மாதத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சமாகி சனி பார்வை பெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயங்களில் கண்டிப்புத் தேவை. அடிக்கடி கொழுப்பு, சர்க்கரை நோயின் அளவை தெரிந்து கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

06. 12. 08 முதல் குரு 6வது வீட்டில் மறைவதால் வீண் செலவுகள், திடீர் பயணங்களுக்கு குறையிருக்காது. மறைமுகப் பகை வந்துபோகும். கன்னிப் பெண்கள் காதல் விவகாரங்களில் கொஞ்சம் உஷாராக செயல்படுங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல், தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு.

வியாபாரத்தில் தை மாதம் முதல் இரட்டிப்பு லாபம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தபட்ட ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். மரவகைகள், கெமிக்கல், ரியல்எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். எனினும் சம்பளம் உயரும். அரசு ஊழியர்கள் பணியில் அலட்சிய வேண்டாம். சக ஊழியர்கள் குறை கூறும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள். கணினி துறையினர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல் வந்துபோகும். புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வது நல்லது.

பரிகாரம் :

சென்னையிலுள்ள மாங்காட்டில் ஸ்ரீஆதி சங்கரரால் எட்டு மூலிகைகளால் உருவாக்கப்பட்ட ராஜயந்திரமான ஸ்ரீசக்கரயந்திரத்தின் மீது அமர்ந்திருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனை குங்கும அர்ச்சனை செய்து வணங்குங்கள். திடீர் யோகம் உண்டாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்