சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள். மற்றவர்களின் தேவையறிந்து உதவும் குணமுடைய நீங்கள், எல்லையில்லா அன்புகொண்டவர்கள். உங்களின் தன பாக்யாதிபதி சுக்ரன் உச்சமாகி உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சர்வதாரி ஆண்டு பிறப்பதால் உங்களுக்குள் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். உங்கள் ராசிக்கு பதினோராவது லாப வீட்டில் இந்த வருடம் பிறப்பதால் எதிலும் ஏற்றம் உண்டாகும்.
குரு 05. 12. 08 வரை நான்காவது வீட்டில் அமர்ந்திருப்பதால் அதுவரை கொஞ்சம் அலைச்சலும், தாயாருக்கு மருத்துவச் செலவுகளும், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்களும் வந்த நீங்கும். வீட்டை மாற்றுவீர்கள். 22. 06. 08 வரை செவ்வாயின் சஞ்சாரம் திருப்திகரமாக இருப்பதால் உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தை மூலம் சரியாகும். 23. 06. 08 முதல் 30. 09. 08 செவ்வாயின் போக்கு சரியில்லாததால் இந்தக் காலக் கட்டத்தில் வீண் அலைச்சலும், சகோதரப் பகையும், சிறு சிறு விபத்துகளும் வரும்.
06. 12. 08 முதல் குரு பூர்வ புண்ய வீட்டில் நுழைவதால் அது முதல் எதிர்பாராத பணவரவும், பிரபலங்களால் காரிய வெற்றியும், சந்தேக மனப்பான்மையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி சச்சரவுகளை மறந்து சேரும் சூழலும் உருவாகும். 28. 01. 09 முதல் ஏப்ரல் மாதத்திற்குள் குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு பாக்யம் கிடைக்கும். வீடு கட்டி புதுமனை புகும் வாய்ப்பு கிட்டும்.
ஏழரைச் சனி உங்களுக்கு தொடர்வதால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். இந்தப் புத்தாண்டு முழுக்க கேது லாப வீட்டில் அமர்ந்து சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. வெளிநாட்டுப் பயணம் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தொடர்ந்து ஐந்தாவது வீட்டில் ராகு நிற்கப் போவதால் பிள்ளைகள் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றப்பாருங்கள். உங்களின் சில தவறுகளைச் சுட்டிக் காட்டுவார்கள். அதற்காகக் கோபப்படாதீர்கள். உங்கள் பிள்ளைகள் காதலில் மூழ்கவும் தவறான நண்பர்களிடம் பழகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் 6. 12. 08 முதல் குரு 5-வது வீட்டிற்கு வருவதால் அவர்களின் போக்கில் நல்ல மாற்றம் வரும்.
ஜனவரி மாதம் முதல் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு, நாடாளுபவர்களால் பலன் அடைதல் வாகனம் வாங்குதல் ஆகியன நிகழும்.
17. 05. 08 - 07. 06. 08 மற்றும் 10. 09. 08 - 1. 10. 08 வரை உங்கள் ராசிநாதன் வக்ரம் அடைவதால் அந்தக் காலக் கட்டத்தில் அலர்ஜி, உணர்ச்சி வசப்படுதல், நெருங்கிய நண்பர்களின் இழப்பு, தூக்கமின்மை வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். காதல் இனிக்கும். மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுங்கள். கணிதம், மொழிப் பாடங்களில் அதிகக் கவனம் தேவை.
வியாபாரத்தில் வேலையாட்களிடம் அரவணைப்பாகப் பேசுவது நல்லது. ஏழரைச் சனி இருப்பதால் எந்த வேலையிலும் நிலைக்காமல் போகக் கூடும். அதிக முன் பணம் யாருக்கும் தர வேண்டாம். 15. 08. 08 முதல் சனி உங்களின் யோகக்காரன் சுக்ரனின் நட்சத்திரத்தில் செல்ல இருப்பதால் அதுமுதல் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கடையை விரிவுப் படுத்துவீர்கள். புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும்.
உத்யோகத்தில் உங்களைப் பற்றி அவதூறாகக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக் கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஜனவரி மாதம் முதல் அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும்.
பரிகாரம் :
கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி சாந்த ஸ்வரூபினியாய் அருள் பாலிக்கும் ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கா தேவியை அஷ்டமி திதியில் அரளிப் பூ சாற்றி வணங்குங்கள். வெற்றி கிட்டும்.