சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : துலாம்!

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவீர்கள். இந்த சர்வதாரி ஆண்டு உங்கள் ராசிக்கு பத்தாவது ராசியில் பிறப்பதால் உங்களை தலைநிமிர வைக்கும். 10இல் கேது அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

15. 08. 08 முதல் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்கும் சனி பகவான் ராசி நாதனான சுக்ரனின் நட்சத்திரத்தில் செல்ல இருப்பதால் அதுமுதல் பணவரவு கொஞ்சம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆறில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முன்கோபமும், அலைச்சலும் அதிகமாகும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் தாமதமாக நிறைவேறும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் துரத்தும். நள்ளிரவுப் பயணங்கள், அதிகாலைப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நான்காவது வீட்டில் ராகு நிற்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.

பூர்வ புண்யாதிபதி சனி 12இல் மறைந்திருப்பதாலும் 06. 12. 08 முதல் புத்திரக்காரகன் குரு ராகுவுடன் சேர இருப்பதாலும் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள், படிப்பு உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும். மகனுக்கு உடல் நலம் பாதிக்கும். மகளின் நட்பு வட்டத்தைக் கண்காணித்துக் கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது சச்சரவுகள், சந்தேகங்கள் உறவினர்களால் தொல்லைகள் வந்து நீங்கும். தங்க நகை, இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தவார்கள்.

வருடப் பிறப்பின் போது குரு மறைந்திருந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். பொது நிகழ்ச்சிகள், கல்யாண, கிரகப் பிரவேச வைபவங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய மே, ஜீன் மாதங்களில் சில வாய்ப்புகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலை கிடைக்கும். உயர்கல்வி அயல்நாட்டில் உண்டு. கலைஞர்களே! கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். மாணவ-மாணவிகளே! புதன் உங்கள் ராசியைப் பார்க்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் படிப்பில் நாட்டம் இருக்கும். கணிதப் பாடத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் குறையும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை ஜீன் மாதத்தில் விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கார்த்திகை, மார்கழி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். சகோதர வகையில் உதவி கிடைத்து கடையை, வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் புரிந்து கொண்டு நடப்பார்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும். போட்டிகள் அதிகமாகும்.

உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகமாகும். மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. 10இல் கேது இருப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. மார்கழி மாதத்தில் சாதித்துக் காட்டுவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

பரிகாரம் :

மதுரை - சோழவந்தானுக்கு அருகில் உள்ள திருவேடகம் எனும் ஊரில் மகாவிஷ்ணு, கருடன், ராசராசன் நின்றசீர் நெடுமாற நாயனார், திருஞான சம்பந்தர் ஆகியோருக்கு அருள்பாலித்த ஸ்ரீமாதேவியம்பாளம்மை உடனுறை ஸ்ரீஏடகநாதேஸ்வரரை பூராடம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தடைகள் விலகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்