சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : விருச்சிகம்!

எதார்த்தமான பேச்சையும், எளிமையான வாழ்க்கையையும் விரும்புவீர்கள். தாராள மனசும், தயாள குணமும் கொண்டவர்கள். தன வீடான 2ஆம் வீட்டில் குரு நிற்க, 9வது ராசியில் சந்திரன் அமர்ந்திருக்க பூர்வ புண்ணிய வீட்டில் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கும் போதும், தைரிய வீடான 3ஆம் வீட்டில் ராகு வலுவாக நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பல சாதனைகளை நீங்கள் படைக்கப் போகிறீர்கள். எவ்வளவோ கடினமாக உழைத்தும் எதுவும் ஒட்டவில்லையே என வருந்தினீர்களே! கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாமல் வாட்டமாக இருந்தீர்களே! திறமையிருந்தும் முடங்கிக் கிடந்தீர்களே! இந்த ஆண்டில் உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். பணபலம் கூடும். கடன் பிரச்சனை தீரும்.

சித்திரை மாதத்தில் புதிய சிந்தனைகள் தோன்றும். வெகுநாட்களாக இழுபறியான பல வேலைகளை இப்பொழுது விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கணவன் -மனைவிக்குள் அவ்வப்போது இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை இல்லையென வருந்திய தம்பத்தியர்களின் கவலையை போக்கும் வகையில் அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளுக்கு உறவினர்கள், நண்பர்கள் வியக்கும்படி கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். வைகாசி மாதத்தில் உடல்நலம் பாதிக்கும். நெஞ்சுவலி, கால், மூட்டுவலி வந்துபோகும். உங்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக சிலர் நடந்து கொள்வார்கள். சகோதரவகையில் மனக்கசப்புகள் வந்துபோகும்.

ஆனி மாதத்தில் புத்துணர்ச்சி ததும்பும். பிரபலங்களின் சந்திப்பால் உதவிகள் கிடைக்கும். சொத்து விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். ஆடி மாதத்தில் தந்தையுடன் வீண் வாக்குவாதங்கள் வரும். அரசுடன் மோதல், ரத்தசோகை, அசதி வந்துபோகும். விரையச்செலவுகளால் சேமிப்புகள் கரையும். ஆவணி மாதத்தில் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வாகனத்தை மாற்றியமைப்பீர்கள். கன்னிப்பெண்களின் கனவுகள் நனவாகும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

புரட்டாசி மாதத்தில் புது முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். 06. 12. 08 முதல் குரு ராசிக்கு மூன்றில் மறைவதால் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலகாரியங்களை முடித்து தருவதாக வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம். அண்டை அயலாரின் அன்புத்தொல்லைகள் வந்துபோகும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.

வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். தை, மாசி மாதங்களில் புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள். வராது என்றிருந்த பாக்கி வந்துசேரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். வாகன உதிரிபாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு. உத்யோகத்தில் மேலதிகாரியிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். உடன் பணிபுரிபவர்களுக்கும் உங்களுக்கு மதிப்பளிப்பார்கள். சம்பளம் உயரும். புது சலுகைகளும் உண்டும். கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம் :

திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையிலுள்ள திருவாசி எனும் ஊரில் பிரம்மன், லக்ஷ்மி, உமா தேவி, சுந்தரர் ஆகியோருக்கு அருள்பாலித்த அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஸ்ரீமாற்றறிவரதேஷ்வரரை தசமி திதி நாளில் சென்று வணங்குங்கள். சரித்திரம் படைப்பீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்