தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், போராட்டகளும், புரட்சிகரமான சிந்தனைகளும் கொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்றிருக்கும் போது இந்தப் புத்தாண்டுப் பிறப்பதால் பரபரப்பாக அனைவராலும் பேசப்படுவீர்கள். 4வது வீட்டில் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்திலும், 7வது வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கும் போதும் இந்த வருடம் பிறப்பதால் சொத்துக்கள் வாங்குவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். 2ஆம் வீட்டில் ராகு இருப்பதால் மற்றவர்களின் விவகாரங்களில் அத்துமீறி தலையிட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி, முன்கோபம் வந்து நீங்கும். இந்த வருடம் முழுக்க 8வது வீட்டில் கேதுத் தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்களும், விவாதங்களும், திடீர் பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் வந்து செல்லும்.
30. 04. 2008 முதல் 22. 06. 2008 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டில் சென்று மறைவதால் வாகனத்தில் செல்லும் போது கவனத்தை சிதற விடமால் இயக்குவது நல்லது. சிறு சிறு விபத்துகள் நேரிடலாம். குடும்பத்தினருடன் விண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். சகோதர-சகோதரிகளுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிலரின் சதியால் சொத்தை இழுக்க நேரிடும். இக்காலக் கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். பொருத்திருந்து செயல்படப் பாருங்கள். 23. 06. 2008 முதல் உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் பகைக் கோளான சனியுடன் சேர்வதால் பிள்ளைகளால் பிரச்சனைகள், தாய் வழி உறவினர்களுடன் கருத்து மோதல், அடி வயிற்றில் வலி, கடன் பிரச்சனைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ஆவணி மாதம் முதல் உங்களின் நிலை மாறும் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு அனுசரித்துப் போவார்கள். புரட்டாசி மாதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி செலவுகளை குறைத்து சிக்கனத்துடன் சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிமாநிலத்தவருடன் புதிய தொடர்புகள் கிடைக்கும். ஐப்பசி மாதத்தில் புது வீட்டில் குடிபுகுவீர்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவார்கள். ஆன்மீக வழிபாடுகளில் அதிகம் நாட்டம் செலுத்துவீர்கள்.
05. 12. 2008 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்துச் செல்லும். 06. 12. 2008 முதல் உங்கள் ராசிநாதன் தன வீட்டில் அமர்வதால் அது முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திடீர் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றில் வெற்றி கிட்டும். உங்கள் ராசிநாதன் குரு நீசமாகி ராகுவுடன் சேர்வதால் பார்வைக் கோளாறு, பேச்சில் தடுமாற்றம், வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். அயல்நாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். கன்னிப்பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். சுபகாரியத்தடைகள் விலகும். மாணவர்கள் சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்வார்கள். கவிதை, கட்டுரைப்போட்டிகளில் முதலிடம் பிடிப்பார்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பங்குனி மாதத்தில் தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்று தீரும். புதிய ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு இப்பொழுது உண்டு. சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். கணினி துறையினர்களின் தகுதிக்கேற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம் :
திருச்சி மலைக்கோட்டையில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஉச்சிப் பிள்ளையாரையும், ஸ்ரீதாயுமானவர் சுவாமிகளையும் சதுர்த்தி திதி அன்று சென்று வணங்குங்கள். புதுத் திட்டங்கள் நிறைவேறும்.