சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : மகரம்!

சமத்துவத்தையே விரும்பும் நீங்கள், சண்டை சச்சரவுகளை விரும்பமாட்டீர்கள். வெளிப்படையானப் பேச்சும், வெள்ளையுள்ளமும் கொண்டவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த சர்வதாரி ஆண்டு பிறப்பதால் புது வாழ்க்கையில் அடி எடுத்த வைப்பீர்கள். ஆறாம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் எதிரிகளுக்கு தக்க பதிலடி தருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரர்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.
உங்கள் ராசிக்குள்ளேயே ராகு, நிற்பதால் உடலில் கட்டி உருவாகும். அடிக்கடி காய்ச்சல், அசதி, எதிலும் ஆர்வமற்ற போக்கு, கொஞ்சம் வெறுப்புணர்வு வந்து நீங்கும்.

மறதி, சோம்பலால் விலையுயர்ந்த பொருட்களின் இழப்புகள் ஏற்படக்கூடும். ராசிக்கு 7இல் ராகுவும், 8இல் சனியும் தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள், வீண் செலவுகள், திடீர்பயணங்கள், ஏமாற்றங்கள் ஏற்படும். கர்ப்பினிப் பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் கோபத்தை காட்டாமல் அவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு பாசமாக பழகப்பாருங்கள்.

அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. களவு போகும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். தாய்வழி உறவினர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகுங்கள். வீடு கட்டும் பணி பணப்பற்றாக்குறையினால் பாதியிலேயே நின்றுப் போனப் வேலையை வங்கிக் கடன் பெற்று வீட்டை கட்டி முடிப்பீர்கள். 22. 06. 08 முதல் 11. 08. 08 முடிய செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டுக்கு வருவதால் சகோதரபகை, வயிற்றுவலி, நெஞ்சுவலி வரக்கூடும். சில சமயங்களில் விபத்துகள் நேரிடலாம். செலவுகளை குறைத்து சிக்கனத்தை கையாளுவது நல்லது. பழைய சொத்தை விற்று, புதிய சொத்து வாங்குவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் பேச்சைக் குறையுங்கள்.

06. 12. 08 முதல் உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் தலைச்சுற்றல், முன்கோபம் வந்து நீங்கும். ஆன்மீக பயணம் சென்று வருவதால் மனநிம்மதி அடைவீர்கள். தியானத்தில் ஈடுபாடு கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பினால் புதிய அனுபவங்கள் ஏற்படும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுவலி வந்துபோகும். உங்கள் ராசிநாதன் சனி 17. 01. 09 முதல் ஏப்ரல் வரை வக்ரம் பெறுவதால் இக்கால கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை, தடைகள் வந்து நீங்கும். கௌரவப் பதவிக் கிடைக்கும். அரசு காரியங்களில் சற்று நிதானம் தேவை. மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிடுவதை தவிர்க்கப்பாருங்கள். கடையை புதுமைப்படுத்து விரிவுப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள். உத்யோகத்தில் நெருக்கடிகள் நீங்கும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய சில புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். கணினி துறையினர்களுக்கு கண் எரிச்சல், கழுத்துவலி வந்துபோகும்.

பரிகாரம் :

கும்பகோணம்-கடையநல்லூருக்கு அருகில் உள்ள வலங்கைமானில் விசுவாமித்திர மகரிஷி பூஜித்து அருள்பெற்ற ஸ்ரீ சர்வாலங்கிர்தமின்னமை உடனுறை ஸ்ரீ சற்குணலிங்கேஸ்வரரை திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனதிருப்தி ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்