சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : கும்பம்!

வெள்ளையுள்ளமும், வெளிப்படையானப் பேச்சு கொண்ட நீங்கள், மனதில் சரியென தோன்றுவதை திட்டவட்டமாக செய்து முடிப்பீர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது அசுர குருவான சுக்ராச்சாரி உங்கள் ராசிக்கு 2வது வீட்டிலும், தேவ குருவான பிரகஸ்பதி 11வது வீட்டிலும் வலுவாக நிற்பதுடன் 6வது வீட்டில் கேதுவும் நிற்பதால் தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். துவண்டுப் போயிருந்த நீங்கள் உற்சாகத்தில் துளிர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்சனைகள், வழக்குகள், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

சித்திரை மாதத்தில் வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கணவன் -மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவீர்கள். என்றாலும் ஆனி, ஆடி மாதங்களில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், விரையச் செலவுகள் வந்துபோகும். குழந்தை இல்லாதவர்களுக்கு மனதில் பட்டதை பளீச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

வைகாசி மாதத்தில் புது முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சனைகள் தீரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வருங்காலத்திற்காக அதிரடியான திட்டங்களை தீட்டிவீர்கள். வெகுகாலங்களுக்குப் பிறகு உங்களின் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வருவீர்கள். 11. 08. 08 முதல் 13. 10. 08 முடிய உள்ள காலகட்டங்களில் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சகோதரவகையில் வீண்செலவு, மன உளைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும். கன்னிப்பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். காதல் கைகூடும். விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவார்கள்.


ஐப்பசி மாதத்தில் தடைகள் நீங்கும். இசை, இலக்கியம் இவற்றில் நாட்டம் அதிகரிக்கும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அனுகூலமான நிலை காணப்படும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புது வாகனத்தில் உலாவருவீர்கள். மாசி, பங்குனி மாதங்களில் பேச்சில் நிதானம் தேவை. வீண் வதந்தி, விமர்சனங்கள் வரக்கூடும். அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சனம் செய்யவேண்டாம். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. எனினும் அவர்களிடத்தில் குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். மாணவர்களே! நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றிபெறுவீர்கள்.

வியாபாரத்தில் புதிதுபுதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணரிணீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அனுகுமுறையை மாற்றுவீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். உத்யோகத்தில் உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டமே இருந்ததே!இனி உங்கள் சேவையை எல்லோரும் மதிப்பார்கள். நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

பரிகாரம் :

கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷிக்கு அருள்பாலித்த ஸ்ரீபூமிதேவியாருடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஉப்பிலியப்பனை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். செல்வம் சேரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்