அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமணன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது.
இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4.30 மணிக்கு அனுராதா ரமணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீடான திருவான்மியூர் வால்மீகி நகர், ராஜ கோபாலன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ளது.
அனுராதா ரமணனுக்கு சுதா, சுபா என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரன், பேத்திகளும் உள்ளனர். அனுராதா ரமணனின் மறைவு குறித்த தகவல் அறிந்ததும் மகள், தங்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனுராதா ரமணனின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு பெசன்ட்நகர் சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
எழுத்தாளர் வரிசையில், பெண் எழுத்தாளராக மிகவும் பிரபலமானவரும், நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்றவருமான எழுத்தாளர் அனுராதா ரமணன் நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி உள்ளார். இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.
1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கழகம் சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றவர் அனுராதா ரமணன்.