ஆங்கிலம் வழித் தமிழில் : சிபிச் செல்வன் நன்றி: பன்முகம் - காலாண்டிதழ் ஏப்ரல்-ஜூன் - 2004
நெருப்பு
அவன் என் கணவன், அகராதி கூறுகிறது. அவன் என்னுடைய தலைவன், பிரபு, குரு, இத்யாதி இத்யாதி அவன் என்னுடைய கடவுள் என்பதை சமுதாயம் ஒப்புக் கொண்டது. என்னுடைய நடுங்குகிற கிழக்கணவன் நன்றாகக் கற்று கொண்டான் ஆதிக்கத்துடன் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்தும் அதிகாரம் குறித்து. ஒளி வீசுகிற சொர்கத்தின் எல்லையில், இறவாத தன்மையுடைய பாலத்தின் மீது உலா போவதில் தணியாத ஆசை உடையவன் அவன். அவன் எல்லாப் பழவகைகளையும், பளிச்சென்று கிளர்ச்சியூட்டும் வண்ணங்களையும், சுவையான உணவுகளையும் விரும்பினான். அவனின் அடங்காத காமத்திற்குப் பின் அழகு தேவதையின் உடலை மென்று சுவைத்து, சப்பி, உறிஞ்சி நடுங்குகிறான். இவை ஒன்றும் என் தலையில் எழுதி வைக்கப்படவில்லை, ஆனால் விதி, இந்த மண்ணில் வாழும் நாட்கள் முழுவதும் எரியும் சூட்டடுப்பில் தள்ளப்பட்ட விறகு போலாக்குகிறது இச்சமூகம். இந்த வாழ்விற்குப் பின், நான் பார்க்கிறேன் நடுங்குகிற கிழக்கணவன் எழுபத்தி ஏழு வயதிற்குப் பின்னும் காமத்தில் திளைப்பதை. நான் மட்டுமே தனியாக இருக்கிறேன், இன்பமான சொர்கத்தின் தோட்டத்தில் நான் மட்டுமே தனிமையில் மனிதனின் நாற்றம் வீசும்குருட்டு ஆபாசத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன், நான் உள்ளுக்குள் காலங்காலமாக தீரா நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிறேன், ஒரு கற்புள்ள நற்குணமுள்ள பெண் என்பதால்.