பாலியல் தொழிலாளர்களுக்கு 15 லட்சம் பெண்ணுறை

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:19 IST)
எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டில் 15 லட்சம் பெண்ணுறைகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகம் தவிர மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைமை இயக்குனர் சுஜாதா ராவ் இதுபற்றிக் கூறுகையில், கடந்த 2007-ம் ஆண்டில் பாலியல் தொழிலாளர்களுக்கு பெண்ணுறை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இதனால் எய்ட்ஸ் நோயைப் பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் வெகுவான முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக, பாலியல் தொழிலாளர்களை அணுகி, பெண்ணுறை வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் 25 லட்சத்துக்கும் மேலானோர் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், இவர்களில் 86 சதவிகிதத்தினர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாகவே நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆணுறை குறித்த விழிப்புணர்வு இருந்தபோதிலும், பலர் அவற்றைப் பயன்படுத்த மறுப்பதால் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணுறையானது, பாலியல் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பப் பெண்களுக்கும் கூட, பால்வினை நோய்களிலிருந்தும், தேவையற்ற கருத்தரிப்பிலிருந்தும் பாதுகாப்பளிக்கக்கூடியவை.

வெப்துனியாவைப் படிக்கவும்