பாலுறவு அல்லது உடலுறவு தொடர்பான விஷயங்களையும், மனிதர்கள் தோன்றிய காலந்தொட்டு உடலுறவை எந்த மாதிரியான சூழலில் நாகரிக சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது பற்றிய ஒருசில தகவல்களையும் முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.
மனிதன் மிருகங்களில் இருந்து வேறுபட்டவன். குரங்கில் இருந்து மனிதன் உருவாகியிருக்கிறான் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நாம் கூறிவந்தாலும், மிருகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடு ஆறாம் அறிவு எனப்படும் பகுத்தறிவு தான்.
பாலூட்டிகளானாலும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்த எந்த பறவைகளை எடுத்துக் கொண்டாலும், அவை ஐந்தறிவு கொண்டவையே. அவற்றுக்கு சொந்த-பந்தம், உடன்பிறப்பு என பிரித்துப் பார்த்து உறவு (தான், தன் குட்டி என்பதைத் தவிர) கொள்ளத் தெரியாது.
ஆனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மனிதன், மிருகங்களில் இருந்து தொன்றுதொட்டே வேறுபட்டு வந்துள்ளான் என அறிகிறோம். காடு, கரை என சுற்றித்திரிந்த மனிதர்கள் ஒருகட்டத்தில் தங்களுக்கு என ஒரு பகுதியை உருவாக்கி, அதனைச் சுற்றி வாழப் பழகிக் கொண்டனர்.
அதேபோல பாலுறவு விஷயத்திலும் தங்களுக்கென ஒரு வழிமுறைகளைக் கையாளத் தொடங்கியதும் தெரிய வருகிறது.
தாய்-தந்தை, மகன், மகள், மாமன், அத்தை, தந்தையின் தம்பி, தாயின் தமையாள் என்ற உறவுகள் மெல்ல வளர்ந்து வந்துள்ளது.
தனது மகளை மாமனுக்கு மணம் முடித்து உறவுகளில் ஒரு நெருக்கத்தை, பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.
எவ்வளவோ மருத்துவப்பூர்வ அறிவுரைகள், விழிப்புணர்வுகள் ஏற்பட்டு விட்ட நிலையிலும், கிராமப்புறங்களில் குடும்பத் தலைவன், மனைவியின் தம்பிக்கு தனது மகளை - அதாவது, மாமனுக்கு (முறை மாமனுக்கு) திருமணம் செய்து வைக்கும் முறை இன்றளவும் நீடித்து வருவதைப் பார்க்கிறோம்.
ஆடையின்றி இருந்தவன் ஆடை அணியக் கற்றுக் கொண்டபின், முறையின்றி செய்த உடலுறவை தனக்குத் தானே ஒரு வழிமுறையை உருவாக்கி, இப்படித்தான் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்று அனுபவ ரீதியில் மாற்றிக் கொண்டு வந்துள்ளான். தனது சந்ததியினருக்கும் அந்த வழிமுறைகளை குறிப்பறிதல் மூலம் கற்றுக் கொடுக்கிறான்.
சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், திருமணம் முடிக்கும் மணப்பெண்ணுக்கு தோழிகள் சூசகமாக `அந்த உறவு' பற்றி பயிற்றுவிப்பார்கள் என அறிகிறோம்.
மணமகனிடம் முதலிரவின்போது, மணப்பெண் எப்படி பாந்தம் - பவ்யமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கேலி, கிண்டல் வாயிலாக எடுத்துரைத்து, உணர்த்தி வந்திருப்பதையும் அறிகிறோம்.
ஆண்கள் தரப்பிலும், திருமணத்தின்போது நண்பர்கள், அக்காள் கணவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் என சிலர், பாலுறவு குறித்த விஷயங்களை மேலோட்டமாக - பட்டும்படாமலும் உணர்த்துவார்கள்.
ஆனால், இன்றைய கால கட்டத்தில் ஊடகங்கள் என்ற விஞ்ஞானப்பூர்வ வளர்ச்சிக்கு இடையே, ஏற்கனவே முந்தைய கட்டுரையில் கூறியது போன்று, ஒவ்வொரு தரப்பிற்கும் ஒவ்வொரு விதமான ஊடகங்கள் பாலுறவை கற்றுக்கொள்ள பாலமாக அமைகின்றன எனலாம்.
எந்த வழியில் கற்றுக்கொண்டாலும் பரவாயில்லை. அந்த உறவை எல்லை மீறி, தவறான பாதையில் செல்லாமல் அணை போட்டு தேவைக்கேற்ப உறவு கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்வதே மனித சமுதாயத்திற்கும், தனிமனித ஒழுக்கத்திற்கும் வித்திடுகிறது எனலாம். தொடர்ந்து வரும் பதிப்புகளில் அதுபற்றி மேலும் அறிவோம்.