புகையிலைப் பொருட்கள் மீதான புதிய படத்துடன் கூடிய எச்சரிக்கை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
2008 ஆம் வருடத்திய சிகரெட்டுகள், இதர புகையிலைப் பொருட்கள் (பாக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிமுறைகளின் பிரிவுகளின்படியும், பின்னர் 2008 ஆம் ஆண்டு, 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படியும் 31.05.2009 ஆம் ஆண்டு மத்திய சுகாதாரம்-குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பிட்ட சில சுகாதார எச்சரிக்கை விதிகள், ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறையும் வெளியிடப்பட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்துட்டுள்ளது. இதனால் புகையிலைப் பொருட்கள் குறித்த சுகாதார எச்சரிக்கைகளை முறையான கால இடைவெளியில், புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது மத்திய சுகாதாரம்-குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட வேண்டும்.
2010ஆம் வருடத்திய சிகரெட்டுகள், இதர புகையிலைப் பொருட்கள் (பாக்கேஜிங் & லேபிளிங்) (திருத்தம்) விதிமுறைகள், இந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இதன்படி புகையிலைப் பொருட்களை புகைப்பது, மென்று உட்கொள்வது ஆகியவற்றுக்கான புதிய சுகாதார எச்சரிக்கைகள் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.