பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்வு

புதன், 17 செப்டம்பர் 2008 (17:12 IST)
அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கான பேறுகால விடுப்பை ஏற்கனவே இருந்த 3 மாதத்தில் இருந்து 6 மாதங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் 2 குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக 2 ஆண்டுகள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குழந்தை பிறந்த உடன் 180 நாள்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளின் படிப்பு, உடல்நலம் கருதி அவர்களைக் கவனிப்பதற்காக மேலும் 730 நாள்கள் பெண்கள் தங்கள் பணிக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வயது 18-க்குள் இருக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மட்டுமே இச்சலுகையைப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையால் அவர்களது பணிமூப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தேவை ஏற்பட்டால் குழந்தைகளை கவனிப்பதற்காக 3 ஆண்டுகள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தச் சலுகை செப்டம்பர் 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்