தங்கம், வெள்ளி, வைர நகைகளை இனி மறந்து விடுங்கள். விரைவில் வெளியாகவிருக்கும் புதிய வகை ஆபரணங்கள் உங்களை மேலும் ஜொலிக்க வைக்கும். ஆம். தாய்ப்பாலில் இருந்து நெக்லஸ், பிரேஸ்லெட் போன்ற ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள நகை தயாரிக்கும் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது. இந்தக் குழு முதன்முதலில் 'பால் நெக்லஸ்'-களைத் தயாரித்துள்ளது.
பிரேஸ்லெட் மற்றும் பிறவகை ஆபரணங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்க இருப்பதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து (அசிட்டிக் அமிலம்) நன்கு கொதிக்க வைப்பதன் மூலம் பாலில் உள்ள கேசின் புரதம், இந்த கலவையை பிளாஸ்டிக் போன்று மாற்றி விடுகிறது. பின்னர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம். பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழகிய வடிவில் நகைகளாக மாற்றி விடுகிறார்களாம்.
தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர்.
இதுபோன்ற நகை வடிவமைப்பை அவர்கள் "பால் முத்து" (milk pearl), என்று குறிப்பிடுகிறார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.
என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம்.