அகோரஃபோபியா (Agoraphobia -திறந்தவெளி பற்றிய பேரச்சம்)

வெள்ளி, 2 மார்ச் 2012 (00:13 IST)
அகோரஃபோபியா என்பது பயம் தொடர்பான ஒரு மன நோயாகும். இதுபோன்ற அச்ச உணர்வுள்ளவர்கள் திறந்தவெளி இடங்களையும், கூட்டம், நெரிசல் அதிகமான இடங்களையும், அதுபோன்ற சூழ்நிலைகளையும் கண்டு மனப்பீதி அடைவார்கள்.

அதாவது தான் தப்பிக்கவே வழியல்ல என்று நினைத்துக் கொண்டு பெரும் அச்சங்கொள்வார்கள். டிரைவிங் செய்யும்போது, பாலங்களைக் கடக்கும் போதும், கூட்டம் மிகுந்த இடங்களிலும் இவ்வகையான பேரச்சம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த இடங்கள் மட்டுமல்லாது, அதுபோன்ற சூழ்நிலைகளை கற்பனை செய்வதன் மூலமும் ஒரு சிலர் பேரச்சத்திற்குள் தள்ளப்படும் நிலையும் உண்டு.

இதனால் சிலர் தங்கள் வீட்டை விட்டுக்கூட கிளம்பாமல் முடங்கிவிடும் அபாயமும் உள்ளது.

இந்த வகையான அச்ச உணர்வு ஏன் ஏற்படுகிறது என்று மருத்துவ ரீதியாக சரியான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மற்ற மனநோய்கள் போலவே இதற்கும் மரபுரீதியான காரணிகளும், சுற்றுப்புற சூழல் ரீதியான காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நோய் அறிகுறிகள் :

சில இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதும், தப்பிக்க வழியில்லை என்ற அச்சத்தில், ஏதோ ஒன்றை செய்து கொண்டிருப்பதும் அகோரஃபோபியா என்ற மனச்சிக்கல் இருப்பதற்கான கூறுகள் ஆகும்.

திடீரென இருதய துடிப்பு அதிகரித்தல்.

வெப்பம் இல்லாத போதும் வியர்த்துக்கொட்டுதல்.

உடல்நடுக்கம், தடுமாற்றம்.

சரியாக மூச்சுவிட முடியவில்லை என்ற உணர்வில் மூச்சுத்திணறல் ஏற்படுதல்.

நெஞ்சுவலி.

குமட்டல்.

தலைசுற்றல்.

பைத்தியம் ஆகிறோம் என்ற அச்சம் அல்லது உடல் செயல்பாடுகளின் கட்டுப்பாடுகள் இழக்கிறோம் மற்றும் மரணம் பற்றிய பேரச்சம்.

புலன் உணர்வு குறைந்த நிலை.

பேரச்ச உணர்வு ஒரே நாளில் பலமுறையோ அல்லது திடீர், திடீரென எப்போதாவதோ ஏற்படலாம். இந்த அச்ச உணர்வு 10 அல்லது 15 நிமிடங்கள் நீடிக்கலாம்.

பொதுவாக மருத்துவர் நோய்க்குறிகளை பற்றி விசாரணை மேற்கொள்வார். இந்நோய்க்கான பிற பொது அறிகுறிகளை கணக்கில் எடுத்துக் கொள்வார். மருத்துவரீதியான உடல் நலமின்மை அல்லது குடிப்பழக்கம் பற்றிய விசாரணை இதில் அடங்காது. இதற்கு தனியாக மருத்துவப் பரிசோதனை தேவைப்படும்.

சிகிச்சை என்ன?

தினசரி வாழ்க்கையில் இந்த அச்ச உணர்வின் பங்கு என்ன என்பதை பொறுத்து சிகிச்சை அமையும். அகோராஃபோபியாவுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. நடத்தை முறை சிகிச்சை, அறிதல் முறை சிகிச்சை, தளர்வு சிகிச்சை (Relaxation therapy) காட்சிப் பிம்பங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் முறையில் சிகிச்சை அளித்தல்.

இதில் மிக பயனுள்ள சிகிச்சையாக, எந்த சூழ்நிலை அல்லது அனுபவம் கண்டு அச்சம் ஏற்படுகிறதோ, அதே சூழ்நிலை அல்லது அனுபவத்திற்கு நோயாளியை மீண்டும் உட்படுத்துவது. அதாவது நம்பகமான ஒரு நண்பருடன் இதை செய்து பார்க்கலாம். அதாவது ஒரு பாலத்தை கடப்பதோ, கூட்டம் அதிகமாக உள்ள இடங்களோ அல்லது இதுபோன்ற சூழ்நிலைகளோ எந்தவித ஆபத்தும் இல்லை என்று நோயாளி உணரும் வரை சிகிச்சை முறையை நீட்டிக்கலாம்.

அகோரஃபோபியா என்ற பேரச்ச உணர்வு சில வருடங்களுக்கோ, ஏன் ஆயுள் முழுவதும் கூட நீடிக்கலாம்.

சாதாரண பயங்களையும், இதுபோன்ற பேரச்சங்களையும் இனம் பிரித்துக்காண மனநோய் மருத்துவர்களை ஆலோசிப்பது உசிதம்.

பொதுவாக தனிமையை தவிர்ப்பது நல்லது

வெப்துனியாவைப் படிக்கவும்