மாரடைப்பின் அறிகுறிகள்

செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (11:39 IST)
ஆண்களை விடவும் பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்புகள் குறைவு என்றாலும், மாரடைப்பு வராது என்/று கூற முடியாது. பெண்களுக்கு வயிற்றின் மேல் பகுதியிலும் நெஞ்சு எலும்புகளிலும் வலி ஏற்படுகிறது. சில சமயம் வியர்வை, தலை லேசாகுதல், தலை சுற்றல் போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.

இவற்றை பெரும்பாலான பெண்கள் அலட்சியப்படுத்தி விட்டு, டாக்டரிடம் செல்வதில்லை.

இதயத்தில் ஒரு சிலருக்கு சில அசவுகரியங்கள் ஏற்படும். அதே அசவுகரியங்கள் மற்றவர்களுக்கு ஏற்படாது. ஒருவர் இதய வலியை அதிகமாக உணர்வார். மற்றவர் அதே வலியை உணரமாட்டார்.

எனவே, மருத்துவரிடம் நீங்களாகவே சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அப்போது இதயத்தின் தசைப் பகுதிகளும் சேதமடைகின்றன.

மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன?

நெஞ்சுவலி தொடர்ந்து இருப்பது, இடதுபக்க தோள் பட்டையில் அழுத்தம், முதுகில் வலி போன்றவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சராசரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

பெண்களுக்கு நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் வலி அல்லது அழுத்தம் கை மற்றும் தாடைகளுக்குப் பரவும். மூச்சு வாங்குதல், மயக்கம், வியர்த்தல், தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவையும் முக்கிய அறிகுறிகளாகும்.

இதயத்திற்குச் செல்லும் ரத்த அடைப்புகளைச் சரிசெய்வதற்கு பல்வேறு நவீன சிகச்சைகள் இன்றைய கால கட்டத்தில் அளிக்கப்படுகின்றன.

பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்ட்டி மூலம் இதயத்தில் உள்ள அடைப்புகளைச் சரி செய்யலாம். பைபாஸ் அறுவை சிகிச்சை மூலமும் இதயத்துக்கு ரத்தம் செல்லும் மாற்றுப் பாதையை அமைத்து நன்கு செயல்படச் செய்யலாம்.

ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டு இதய வலி உள்ளவர்கள், எந்தவிதச் சங்கடமும் வலியும் இல்லாமலும் மருத்துவமனையில் தங்காமலும் நவீன முறையில் சிகிச்சை பெறவும் முடியும்.

எனவே நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் அது எதனால் ஏற்படுகிறது? என்பதை அறிந்து, முடிந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் ஈசிஜி பரிசோதனை செய்த பின், உரிய இதய நோய் மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற வேண்டும்.

சாதாரண நெஞ்சுவலிதானே என்று டாக்டரிடம் செல்லாமல் இருந்தால், அது பின்னாளில் பெரிய ஆபத்தை உருவாக்கி விடக்கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்