மூளையில் ஏற்படும் ஒருவித நோயான அல்ஸிமெர் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு, மூளை ஸ்கேன் உதவுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராஃபியை (Positron Emission Tomography - PET) பயன்படுத்தி எடுக்கப்படும் மூளை ஸ்கேன் மூலம் அல்ஸிமெர் நோய் உடனடியாகத் தெரிய வந்து விடுவதால், சிகிச்சையை முன்கூட்டியே எடுக்க முடியும் என்று அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நோய்க்கான அறிகுறிகள் தெரியும் முன்பே கண்டறிந்து விட்டால், சிகிச்சையை தீவிரமாக அளித்து, நோயை முறியடிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயாளியின் வயது, அவரது பரம்பரை உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு இந்நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்களை திரட்டியதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த வகை ஸ்கேனில் மூளையில் என்ன செயல்பாடு நடைபெறுகிறது என்பதை அறிய முடிகிறது என்று பல்கலைக்கழகத்தின் டாக்டர் கேரி ஸ்மால் தெரிவித்தார்.