ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:35 IST)
குழந்தைகளுக்கு சத்தாண உணவாகவும், அதே சமயம் அவர்களுக்கு பிடித்த வகையிலும் கொடுப்பதற்கு இந்த காய்கறி சூப் சரியான தேர்வாக இருக்கும். செய்யவும் மிகவும் எளிதானது. இதில் புதுமைகளை கையாள வேண்டியது உங்களது சாமர்த்தியம்.
தேவையான பொருள்கள்:
கோஸ் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
சோளமாவு - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பட்டை லவுங்கம் - சிறிதளவு
பிரியாணி இலை - சிறிதளவு
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை:
வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம், பிரியாணி இலை, வெங்காயம் போட்டு, பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேகவைக்கவும்.
காய்கறிகள் வெந்ததும் மூன்று தேக்கரண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து வேகும் காய்கறியில் ஊற்றி கொதிக்க விடவும். சூப் பதத்திற்கு வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
தேவைப்பட்டால் கான்பிளக்ஸை எண்ணணெய்யில் பொறித்து மேலே தூவி பரிமாறலாம்.
சுவையான காய்கறி சூப் தயார்.