பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் கால பைரவர்.
காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக்காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக்கணித முறைகள் தோன்றியதாம்.
தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.