பெண்களுக்கு சகல சக்திகளையும் கொடுக்கக்கூடிய நாள் கருட பஞ்சமி. இந்தத் திருநாளை 'நாக பஞ்சமி' என்றும் சிலர் அழைப்பார்கள். இந்த நாளில் கருடனை வழிபடுவதுடன், நாக வழிபாடும் செய்து வணங்குவதால் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம். ஆனால் தமிழ் நாட்டில் பெரும்பாலும் கருட பஞ்சமிக்கு முதல் நாளே நாக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது.
கருட பஞ்சமி நாளின் அதிகாலை எழுந்து நீராடி வீட்டையும் பூஜையறையையும் தூய்மைப்படுத்தி அலங்கரிக்க வேண்டும். வீட்டின் நுழை வாசல் கதவின் அருகே உள்ள சுவரில் மஞ்சள், குங்குமம் தடவி வைக்க வேண்டும். இது மங்கல வரவேற்பு என்பதால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிறையும். முடிந்தவர்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடரை வழிபடலாம்.
வீட்டுக்கு அருகே உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் ஊற்றி வணங்கி, புற்று மண்ணை பிரசாதமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
கருட பஞ்சமி நாளில் சிலர் மஞ்சள் சரடில் மலர் ஒன்றை வைத்து அதை கையில் கட்டிக்கொள்வார்கள். வீட்டின் பூஜை அறையில் அம்பிகைக்கு முன்பு கருடரையும் நாகராஜரையும் எண்ணி வழிபடலாம். அப்போது 'ஓம் கருடாய நம' 'ஓம் நாகராஜாய நம' என்று சொல்லி வழிபடலாம்.