செய்திக்கு, பாட்டுக்கு, சிரிப்புக்கு என தனித்தனி சேனல்கள் துவங்கப்பட்டு வரும் நிலையில், முழுக்க முழுக்க ஆன்மிக நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது சங்கரா டிவி.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி தமிழிலும், கன்னடத்திலுமாக அதிகாரபூர்வ ஒளிபரப்பைத் தொடங்கியது சங்கரா டிவி.
இந்த டிவி நிகழ்ச்சிகள் துவக்கத்தில் தமிழகத்தின் சில இடங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. தற்போதுதான் இந்த டிவி நிகழ்ச்சிகள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுமார் 72 நாடுகளில் செயற்கைக்கோள் வழியாக இந்த டிவி ஒளிபரப்பாகி வருகிறது.
சங்கரா டிவியின் செயல்பாடுகள் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் கூறுகையில், இந்திய மக்களின் சமூக கலாசாரம், பண்பாடு, நாகரீகம் இதையெல்லாம் மேம்படுத்துவது சங்கரா டிவியின் உன்னத நோக்கமாக இருக்கும்.
ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், வெறும் சொற்பொழிவோடு நின்றுவிடாமல் நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் பக்தித் தொடர்களும் இடம் பெறும். அதோடு நடனம், இயற்கை மருத்துவம், யோகா போன்ற அடிப்படை ஆரோக்கிய அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளும் இந்த டிவியில் இடம் பிடிக்கும்.
கோவில் திருவிழாக்கள், மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் என சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு தேடிச்சென்று காட்சிகளை படம் பிடித்து ஒளிபரப்புவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் அதே சமயம் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியும் இந்த டிவியில் இடம் பெறாது கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.