வெற்றி பெற்ற சினிமா படங்களை அதன் ரசிப்புத் தன்மை குறையாமல் தொகுக்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
அதாவது இரண்டரை மற்றும் மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படங்களை படத் தொகுப்பு செய்து ஒரு மணி நேரத் திரைப்படமாக மாற்றி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மக்களிடம் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற பல படங்களில் கூட ரசிகர்களுக்குச் சலிப்பூட்டும் சில காட்சிகளோ பாடல்களோ இடம் பெற்றிருக்கலாம்.
அவற்றை படத்தொகுப்பு செய்து ஒரு மணி நேரத்திலேயே முழுப் படத்தையும் நேயர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் புதிய முயற்சியைத் தொடங்கியிருப்பதாக விஜய் டிவி தெரிவித்துள்ளது.
கல்லுக்குள் ஈரம், டார்லிங் டார்லிங் டார்லிங், செம்பருத்தி, சிங்காரவேலன், வாழ்க்கை, பந்தம், சொல்லத் துடிக்குது மனசு போன்ற பல படங்கள் இடம்பெற உள்ளன.
செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 2 மணிக்கு குட்டிப் படம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.