அக்காள்-தங்கை தொடரின் இயக்குநர் புவனேஷ் பேட்டி

சனி, 5 ஜூலை 2008 (14:43 IST)
webdunia photoWD
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்காள் - தங்கை தொடரை இயக்கி வருபவர் கே.ஏ. புவனேஷ். தொலைக்காட்சி தொடரில் அழுத்தமாக தடம் பதித்தாலும், அடுத்த இலக்கு சினிமாதான் என்றவரை வெப்துனியாவுக்காக சந்தித்தோம்.

தொலைக்காட்சி தொடர் இயக்குநராக இருந்தாலும் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் அவர்களை பாதித்த இயக்குநர்கள் என்று சிலர் இருப்பார்கள். உங்களை பாதித்தவர்கள் யார்?

முதலில் மகேந்திரன், இரண்டாவது மணிவண்ணன், இவங்க இரண்டு பேரோட படங்களையும் பார்த்து வியந்திருக்கிறேன். மகேந்திரன் சாரோட கதைக்களம், எடுக்கப்படும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மணிவண்ணன் சாரோட கமர்ணஷியல, எவ்வளவு பெரிய விஷயத்தையும் அழகா புரியும்படி சொல்ற பாணி ரொம்ப பிடிக்கும்.

இந்த இரு இயக்குனர்களோட பாதிப்புதான் சொந்த ஊரிலிருந்து உங்களை சினிமாவில் சேர சென்னைக்கு அழைத்து வந்தது என்று கூறலாமா?

1993ல் சேலம் அழகாபுரத்திலிருந்து சினிமாவில் சேர என்னை சென்னைக்கு இழுத்து வந்தது இவங்க இரண்டு பேரோட படங்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமாவில் சேர வந்த நீங்க எப்படி சீரியல் இயக்குனரானீங்க?

webdunia photoWD
சென்னை வந்ததும் பிரபல இயக்குநர்கள் பலரை சந்தித்தேன். எல்லோரும் அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க. மனம் தளராமல் சசிமோகன் சார் கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன். அவர் அப்போது பாக்யராஜ், கவுதமி நடித்த ருத்ரா படத்தை இயக்கிக்கிட்டிருந்தார். தொடர்ந்து ஏழு படங்கள் அவர் கிட்ட வேலை பார்த்தேன். நாலே படங்களில் உதவி இயக்குநர் என்பதில் இருந்து இணை இயக்குனரானேன்.

எப்படி தொலைக்காட்சிக்கு வந்தீங்க?


ஏழு படம் முடிச்சதும் சொந்தமா படம் இயக்க முயற்சி பண்ணுனேன். சில காரணங்களால் அந்த முயற்சி தள்ளிப் போச்சு. அந்த சமயம் ஏவிஎம் தயாரிச்ச நிம்மதி, பாசம் தொடர்களுக்கு வசனம் எழுதுற வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அஞ்சு வருஷம் எழுதுற மாதிரி ஆயிடுச்சு.

இடைப்பட்ட காலத்தில் நிறைய பேர் தொடர் இயக்க சொல்லி கேட்டாங்க. நான் மறுத்துவிட்டேன். சினிமாதான் என்னோட கனவா, லட்சியமா இருந்தது. ஆனா கலைஞர் தொலைக்காட்சியில் அக்காள் - தங்கை தொடர் இயக்க வாய்ப்பு வந்தப்போ மறுக்க முடியலை. பாலாஜி டெலிபிலிம் ஹெட் பிரசாந்த், என்னோட நண்பர் கதாசிரியர் சேக்கிழார் இருவரும்தான் நான் தொடர் இயக்கக் காரணம்.

அக்காள் - தங்கை தொடருக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

webdunia photoWD
மதியம் ஒளிபரப்பான தொடர் இப்போ ப்ரைம் டைமான மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகுது. தொடருக்கு கிடைத்த வரவேற்பு தான் இதுக்கு காரணம். தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுறாங்க. சந்தோஷமாக இருக்கிறது.

அதே நேரம் சீரியலுக்கு அதிகமான நேரமும் உழைப்பும் தேவைப்படுது. சின்னச் சின்ன மனஸ்தாபங்களும் உண்டு. என்ன நடந்தாலும் இயக்குநர் எனப்வர் கேப்டன் மாதிரி எதுக்கும் தலைவணங்கக் கூடாதுங்கிறது என்னோட பாலிசி.

நல்ல சம்பளம், புகழ்... தொடர்ந்து சீரியல் இயக்குவதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?

கண்டிப்பா இல்லை. இந்த சீரியல் நூறு எபிசோடு முடிஞ்சிடும். அப்புறம் வெளியே வந்திருவேன். என்னோட கனவு, லட்சியம் எல்லாம் சினிமாதான். என் மானசீக குரு மணிவண்ணன். அவர் மாதிரி நல்ல கமர்ஷியல் டைரக்டர்னு பெயர் எடுக்கணும். அதுவரை ஓயுறதா இல்லை.