ராஜ் டி.வி.யின் புதிய சேனல்: `ராஜ் மியூசிக்' நாளை முதல் ஒளிபரப்பு!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (11:16 IST)
ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து ராஜ் மியூசிக் என்ற புதிய சேனல் நாளை துவங்குகிறது என்று அதன் நிர்வாகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய சேனல் குறித்து ராஜ் தொலைக்காட்சி நிர்வாகி எம்.ரவீந்திரன் கூறுகையில், ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து புதிதாக உதயமாகும் ராஜ் மியூசிக் சேனல் இசைப்பிரியர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட சேனல். இதில் இளைஞர்களின் திறமைகள் வெளிப்படும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அதோடு பாடத்துடிக்கும் இளைஞர்களையும் இந்த சேனல் மூலமாக அறிமுகப்படுத்தவிருக்கிறோம். கிராமியக் கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகள் வழங்குகிறோம்.
இளைஞர்கள் மட்டுமின்றி முதியோர்களுக்கும் இந்த சேனலில் முக்கியத்துவம் உண்டு. கிராமபோன் என்ற நிகழ்ச்சி மூலம் முதியோர் தங்கள் அந்நாளைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். மல்லிகை என்ற நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்த பெண்கள் தங்கள் வெற்றிப்பின்னணியை விவரிப்பார்கள். அதோடு நவீன கால ஆடை அலங்காரங்கள், நகரின் சிறந்த உணவகங்கள் பற்றியும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த சேனலில் 5 மணி நேர நிகழ்ச்சிகள் மட்டும் நேரடி ஒளிபரப்பாக இருக்கும்.
இந்த மியூசிக் சேனல் தமிழைத் தொடர்ந்து கன்னடத்தில் ஏப்ரல் மாதத்திலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் ஜூன் மாதத்தில் இருந்தும், இந்தியில் நவம்பர் மாதத்தில் இருந்தும் ஒளிபரப்பாக இருக்கிறது என்று ரவீந்திரன் கூறினார்.