அயல் நாட்டவர் சுற்றுலா விசாவிற்கு புதிய நிபந்தனைகள் விதிப்பு

வியாழன், 13 ஜனவரி 2011 (20:24 IST)
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அயல் நாட்டவருக்கு வழங்கப்படும் சுற்றுலா விசாவில் (Tourist Visa) ஒரு முறை பயணம் செய்துவிட்டு மீண்டும் விசா பெறுவதற்கு இரண்டு மாத இடைவெளி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.

சுற்றுலா விசாவிற்கு ஏன் இந்த புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கமளித்து சுற்றறிக்கை விடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், “சுற்றுலா விசா பெற்றுவரும் அயல் நாட்டவர்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று புகார் வந்ததையடுத்து இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

இந்த புதிய நிபந்தனையின்படி, சுற்றுலா விசா பெற்று இந்தியா வரும் அயல் நாட்டவர், தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, மீண்டும் வரவேண்டுமெனில், இரண்டு மாதங்களுக்கு பின்னரே சுற்றுலா விசா பெற முடியும். ஆயினும் ஒரு முறை பெறும் சுற்றுலா விசாவைக் கொண்டு அருகில் உள்ள நாடுகளுக்குச் சென்று, மீண்டும் இந்தியா வந்து தங்கள் நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அந்த சுற்றறிக்கை கூறுகிறது.

“இரண்டு மாத கால இடைவெளிக்கு முன்னரே அவர்கள் மீண்டும் இந்தியா வர வேண்டுமெனில் அதற்கான அவசர காரணம் என்ன என்பதை அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி அவர்களிடம் விவரத்தை தெரிவித்து விசா பெறலாம்” என்று விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு ஒருமுறைக்கு பல முறை இந்தியா வந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், அதற்கான பயணத் திட்டத்தை (விமான பயணச் சீட்டுகளை) முன்னரே காட்டி அதற்கான அனுமதியை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவி்ல் மருத்துவ சிகிச்சை பெற வரும் அயல்நாட்டவர், மருத்துவ விசா (Medical Visa) பெற்றுத்தான் நாட்டிற்குள் வர வேண்டும் என்றும், சுற்றுலா விசா வந்தால் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்