கைவினைப் பொருள் கண்காட்சி
செவ்வாய், 16 நவம்பர் 2010 (12:34 IST)
கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்றுத் துவங்கியது. வரும் 23ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 8 மணி வரை இந்த கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
மத்திய ஜவுளித்துறை மற்றும் தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் அம்பேத்கர் கைவினை பொருட்கள் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவினை மேயர் மா. சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
விதவிதமான கைவினைப் பொருட்கள் இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம்பெற்றுள்ளது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி, ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், ஜெய்ப்பூர் வேலைப்பாடு செய்யப்பட்ட துணிகள், பைகள், ஆடைகள், மரச்சிற்பம், மரத்தால் ஆன புகழ்பெற்ற கோயில் உருவங்கள், பித்தளையில் செய்யப்பட்ட கலைப் பொருட்கள், பூ வேலைகள் நிறைந்த ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், பாத்திரங்கள் என ஏராளமான கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் காண முடிகிறது.
தங்களது கைவினைப் பொருட்களின் உயர்வை கலைஞர்களே விளக்குகிறார்கள். பரிசுப் பொருட்களை வாங்க விரும்புவோர், வீட்டில் அழகிய கலைப் பொருட்களை வைக்கும் ஆர்வலர்கள், கைவினைக் கலைஞர்கள் என பொதுமக்கள் பலரும் வள்ளுவர் கோட்டத்திற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.