பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்டிரலில் இருந்து நெல்லைக்கு வரும் 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை, புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (வ.எண். 06013) இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏராளமான பயணிகள் செல்கின்றனர். எனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வாரந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 12.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இதேபோல், மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வரும் 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 16-ந் தேதி வரை, வியாழக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (06014) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
இந்த ரயில், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை துவங்கி நடந்தது. இந்த தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.