அந்தமான், நிகோபார் தீவுகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று அந்தமான் வர்த்தக மற்றும் தொழில் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்தமான், நிகோபார் தீவுகளில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த தீவுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இதற்காக இதன் நிர்வாகம் வர்த்தக, சுற்றுலா பொருட்காட்சிகளில் பங்கு கொள்ள வேண்டும். அத்துடன் சுற்றுலா பயணிகளை கவரும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அந்தமான் வர்த்தக மற்றும் தொழில் சங்க தலைவர் முகம்மது ஜாவீத் கூறினார்.
அத்துடன் மைய தீவில் இருந்து மற்ற தீவுகளுக்கு செல்வதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கேபிள் கார், தீம் பார்க்குகளை அமைக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை சுற்றுலா திட்டத்தில் (எல்.டி.சி) அந்தமான் தீவுகளுக்கான சுற்றுலாவையும் இணைக்க வேண்டும். இந்த சலுகை 2005 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதை மத்திய அரசு மீண்டும் அனுமதித்து உள்ளது.
இந்த திட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் சுற்றுலா அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அந்தமான் சுற்றுலாவையும் அனுமதிக்க அந்தமான் நிர்வாகமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகம்மது ஜாவீத் தெரிவித்தார்.