இந்தியாவிற்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:39 IST)
இந்தியாவிற்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ரூ.33,321 கோடி அன்னியச் செலாவணி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 35,40,289 சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். சென்ற ஆண்டு இதே காலத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட இது 10.4 விழுக்காடு கூடுதலாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3,91,423 அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். சென்ற ஆண்டு இதே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 3,58,446 ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ரூ.33,321 கோடி அன்னியச் செலாவணி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17.5 விழுக்காடு அதிகமாகும்.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.3,626 கோடி அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 17.7 விழுக்காடு உயர்ந்துள்ளது.