குற்றாலத்தில் படகு சவாரி துவ‌ங்‌கியது!

திங்கள், 28 ஜூலை 2008 (12:49 IST)
webdunia photoFILE
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அ‌திகமாக வருவதா‌ல் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாமில் நேற்று முதல் படகு சவாரி துவங்கியது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்திலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் வழியில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி நடத்தப்படும். இந்த ஆண்டு ஆரம்பத்தில் சீசன் சரியாக இல்லாததால் குளத்தில் தண்ணீர் நிரம்பவில்லை.

கடந்த சில 4 நாட்களாக குற்றாலத்தில் சீசன் முழுமையாக இருக்கிறது. எல்லா அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து நேற்று படகு சவாரி தொடங்கப்பட்டது.

படகு சவாரி துவங்கியதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி செய்தனர். ஏற்கனவே இங்குள்ள 13 படகுகளுடன் 26 புதிய படகுகள் சேர்த்து மொத்தம் 39 படகுகள் விடப்பட்டுள்ளன. இவற்றில் 14 இரண்டு இருக்கை படகுகளும், 15 நான்கு இருக்கை படகுகளும், 6 துடுப்பு படகுகளும், 4 ‘ஹயாக்‘ படகுகளும் அடங்கும்.

அரை மணி நேரத்திற்கு இரண்டு இருக்கை படகுகளுக்கும் ரூ.50, நான்கு இருக்கை படகுக்கு ரூ.70, துடுப்பு படகுக்கு ரூ.80, கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹயாக் வகை படகுகளுக்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட கட்டணம் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்