இந்தியா வருவதில் அமெரிக்கா, பிரிட்டன் பயணிகள் முதலிடம்!
செவ்வாய், 15 ஜூலை 2008 (19:00 IST)
இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன் பயணிகள் முதலிடம் வகிக்கின்றனர்.
மத்திய சுற்றுலா அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள, 2007- ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில், கடந்த ஆண்டு 50 லட்சத்து 81 ஆயிரத்து 504 அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்ததாகவும், இதில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 62 பேர் (15.72 விழுக்காடு) அமெரிக்கர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இந்தியா வந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரத்து 191. இது அமெரிக்கர்களை விடச் சற்றே குறைவு.
இதற்கு அடுத்தபடியாக வங்கதேசம், கனடா, பிரான்ஸ், இலங்கை, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, மலேசிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு அதிகளவில் வந்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை இந்தியா வந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் மட்டும் ரூ.21,963 கோடி அந்நிய செலவாணி கிடைத்து உள்ளதாகவும், இது கடந்த 2007- ஆம் ஆண்டு இதே கால கட்டத்தில் ஈட்டப்பட்ட அந்நிய செலவாணியை விட 16.1 விழுக்காடு அதிகம் என்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவிக்கிறது.