குற்றால அருவிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சென்னையில் இருந்து குற்றாலத்திற்கு ரயிலில் சென்று வரும் வகையிலான ரயில் சுற்றுலா திட்டத்தை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் இருந்து ரயில் மூலம் குற்றாலம் சென்று வர இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை விரைவு ரயில் மூலம் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
நான்கு இரவுகள், மூன்று பகல் கொண்ட இந்த சுற்றுலா திட்டத்தில் தென்காசி வரை ரயிலில் பயணம் செய்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் குற்றாலத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
குற்றாலத்தில் அனைத்து அருவிகள், குற்றாலநாதர் கோயில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில் மற்றும் கேரளா தென்மலைப் பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், பாபநாசர் அணை, அகஸ்தியர் நீர்வீழ்ச்சி என பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்படும் பொதிகை விரைவு ரயில் மூலமாக மறுநாள் காலை சென்னை வந்தடையலாம்.
இந்த சுற்றுலாத் திட்டத்தின் மூலம் செல்லும் நபர் ஒருவருக்கு ரூ.4,200ம், 5 முதல் 12 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கு ரூ.1,600ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
சலுகைகள்
ஆறு நபர்களுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து போகும் போது அவர்களுக்கு கட்டணம் குறைக்கப்படும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறப்புக் கட்டண சலுகையும் உண்டு.
இது பற்றிய மேலும் தகவல்கள் அறிய இந்திய ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் சென்னை அலுவலகத்தின் 044-64594959, 25330341 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.