‌‌தீவு‌த் ‌திட‌லி‌ல் சுற்றுலா பொருட்காட்சியை 15 லட்சம் பே‌ர் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர்!

செவ்வாய், 18 மார்ச் 2008 (12:08 IST)
சென்னை தீவுத் திடலில் 73 நாட்கள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இ‌ந்த பொரு‌ட்கா‌‌‌‌ட்‌சியை 15 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

சென்னை தீவுத்திடலில் 34-வது இந்திய சுற்றுலா-தொழில் பொருட்காட்சி கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆ‌ம் தேதி தொடங்கியது. மத்திய, மாநில அரசுத் துறை நிறுவனங்களின் 41 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 118 கடைகள், 34 தனியார் விற்பனை அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

பொருட்காட்சி அண்ணா கலையரங்கில் 97 நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்பட 139 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டுகளுடன் கேளிக்கை வளாகம் அமைக்கப்பட்டிருந்தது. மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்த பொருட்காட்சி 73 நாட்கள் நடந்தன.

இதன் ‌நிறைவு ‌விழா நே‌ற்று நட‌ந்தது. இதில், நிதி அமைச்சர் க.அன்பழகன் கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், 15 லட்சம் பேர் பொரு‌ட்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட 25 வ‌ிழு‌க்காடு அதிகமாகும். அதுபோல கடந்த ஆண்டைவிட வருவாயும் அதிகரித்துள்ளது. எப்போது இல்லாத அளவிற்கு ரூ.1 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

மே மாதம் கோடைகால பொருட்காட்சி

சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசுகையில், ``இந்த பொருட்காட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து ஒவ்வொரு ஆண்டும் 22 ‌விழு‌க்காடு அதிகரிக்கிறது. மத்திய அரசிடம் இருந்து, பாரம்பரிய சுற்றுலாவிற்கான விருதை தமிழக சுற்றுலா துறை பெற்றுள்ளது. இந்த பொருட்காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, வரும் மே மாதம் கோடைகால பொருட்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்