சென்னை துறைமுகத்துக்கு வந்த கல்வி சுற்றுலா கப்பல்!
புதன், 12 மார்ச் 2008 (15:57 IST)
கல்விச் சுற்றுலாவாக வெளிநாட்டு மாணவ-மாணவிகளுடன் கடலில் மிதக்கும் பல்கலைக்கழக கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா மற்றும் கலாசாரம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இது 6 மாத கால படிப்பாகும். இதற்காக அந்தப் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 831 பேர் எம்.வி.எக்ஸ்புளோரர் என்ற கல்விச் சுற்றுலா கப்பல் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களில் 263 பேர் மாணவர்கள். 568 பேர் மாணவிகள். இவர்கள் தவிர கப்பல் சிப்பந்திகள் 195 பேர் உள்ளனர்.
இந்தக் கப்பல் பஹாமாஸ் நாட்டில் இருந்து கடந்த ஜனவரி 23ஆம் தேதி புறப்பட்டது. பல நாடுகளைக் கடந்து, இறுதியாக மொரிஷியஸ் நாட்டுக்கு இந்தக் கப்பல் சென்றது. அங்கிருந்து சென்னைக்கு எக்ஸ்புளோரர் நேற்று காலை வந்தது. 15ஆம் தேதி மலேசியாவுக்கு எக்ஸ்புளோரர் புறப்பட்டுச் செல்கிறது. இந்த கப்பல் பயணக் கல்வி மே 9ஆம் தேதியோடு முடிகிறது. இந்தக் கப்பலில் 9 வகுப்பறைகள் உள்ளன. நீச்சல் குளம், 940 ஓய்வறை உட்பட பல வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது.
மாணவ-மாணவிகள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் 10 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், மாமல்லபுரம் உட்பட சரித்திர புகழ் பெற்ற இடங்களுக்கு பலர் செல்கின்றனர்.