தொடர் பேருந்து சுற்றுலா திட்டம்

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:22 IST)
பறக்கும் ரயில் மற்றும் தொடர் பேருந்து சுற்றுலா திட்டங்கள் சென்னையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இது போன்ற புதியத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழ நிர்வாக இயக்குநர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.

பறக்கும் ரயில் சுற்றுலா மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பறக்கும் ரயில் நிலையங்களில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வேன்கள் நிறுத்தப்பட்டிருக்கம்.

இரண்டு நேர முறைகளில் இந்த சுற்றுலா நடத்தப்படும். அதாவது காலை 8 மணிக்கும், பிற்பகல் 1.30 மணிக்கும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவர்.

பின்னர் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சுற்றுலா வளர்ச்சிக் கழக வேன் மூலம் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவர்.

இந்தத் திட்டத்தின் மூலம் அடையாறு பாம்பு பண்ணை, கபாலீஸ்வரர் ஆலயம், மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், அருங்காட்சியகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளிட்ட இடங்களை பயணிகள் சுற்றிப் பார்க்கலாம்.

தொடர் பேருந்து சுற்றுலா திட்டத்தின் கீழ் 18 இருக்கைகளுடன், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட நான்கு பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் மட்டும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. மாமல்லபுரம், முட்டுக்காடு படகு சவாரி உட்பட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.

இந்த நான்கு பேருந்துகளும் கிழக்கு கடற்கரை சாலையில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் காலை 6 மணி முதல் 8 மணி வரை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு தலங்களையும் பார்த்துவிட்டு, இந்த நான்கு பேருந்துகளில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிக் கொள்ளலாம்.

இந்த தொடர் பேருந்து சுற்றுலாத் திட்டம் வரும் மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார் ராஜாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்