பழனியில் கார்த்திகை திருவிழா துவக்கம்
செவ்வாய், 16 நவம்பர் 2010 (12:20 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
மலைக்கோயிலான பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் 7 நாட்கள் நடைபெறும் கார்ததிகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சொக்கப்பனை ஏற்றுதலும் வரும் 21ஆம் தேதி நடைபெறும்.
பழனி மலைக்கோயிலில் நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையை தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து உற்சவர், சண்முகர், வள்ளி, தெய்வானை எழுந்தருள, முகத்துக்கு ஒருவர் என ஆறுமுகத்துக்கு ஆறு பேர் நின்று அர்ச்சனைகள், தீபாராதனை நடத்தினர்.
பழனியில் நடைபெறும் மகா தீபத் திருவிழாவைக் காண ஏராளமானோர் பழனிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.