மிகவும் புகழ்பெற்றதும், மிகவும் உயரத்தில் அமைந்துள்ள கோயிலான பத்ரிநாத் கோயில் குளிர்காலம் துவங்குவதையொட்டி நவம்பர் 18-ம் தேதி முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த கோயில் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் பத்ரிநாத்தை தரிசிக்க வருகின்றனர்.
ஆண்டுதோறும் குளிர்காலத்தில் இந்த கோயில் மூடப்படுவது வழக்கம். இந்த காலத்தில் இங்கு பனிப்பொழிவு அதிகம் இருக்கும். பனிப்பொழிவு காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பக்தர்கள் கோயிலுக்கு வராமல் இருப்பதற்காகவே கோயில் குளிர் காலத்தில் மூடப்படுகிறது.
பனிப்பொழிவு குறைந்த பின்னர் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படும். கோயில் மூடப்பட்ட காலங்களில் அருகிலுள்ள ஜோஷிமாதா நகரிலுள்ள ருத்ரநாத் கோயிலில் பத்ரிநாத்துக்கு பூஜைகள் நடக்கும்.