தமிழகத்தில் கத்திரி வெயில் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், கொடைக்கானலில் குளுகுளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அதிலும் வார இறுதி நாட்களில் கொடைக்கானலுக்கே மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரே சமயத்தில் கொடைக்கானலுக்கு வருவதால், போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தங்கும் அறைகள் கிடைக்காமல் பல குடும்பங்கள் சிரமப்படுகின்றனர்.
WD
மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகிறது. இந்த அழகிய மலர்களின் அழகினை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இசை நடன நீரூற்று நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது. தற்போது அந்த நீரூற்று செயல்பட தொடங்கி உள்ளதால் அவையும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
WD
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சாவரி செய்தபடி ஏரியை சுற்றிலும் உள்ள இயற்கை அழகினை ரசித்து வருகின்றனர். மேலும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
சுற்றுலாத் தலங்களை விட, அதிகமாக சுற்றுலாப் பயணிகளை மயக்கும் ஒரு விஷயம், மேகக் கூட்டங்கள்தான். கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்த பயணிகளை வரவேற்கும் விதமாக அவ்வப்போது மேகக்கூட்டங்கள் தரையிரங்கி மரங்களையும், வீடுகளையும் வருடிவிட்டுச் செல்கின்றன. திடீரென எதிரே இருக்கும் இடத்தை தெரியாத வண்ணம் மறைக்கும் மேகக் கூட்டங்களும், ஒரு சில நிமிடங்களில் காணாமல் போகும் விதமும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைப்பவையாக உள்ளது.
ஆனால், ஒரே சமயத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதால் கொடைக்கானலுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் நகரில் முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
வாகனங்களை நிறுத்தும் இடங்கள் முழுவதும் வாகனங்கள் நிரம்பி விட்டதால், வாகனத்தை நிறுத்த இடம் இல்லாமல் பல வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்து இருந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி, சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை போன்ற இடங்களைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் நிரம்பி உள்ளன. கூட்டம் அதிகமாக உள்ளதால் தங்கும் விடுதியில் அறைகளின் வாடகைகளும் அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பலர் தங்களது வாகனங்களிலேயே தங்கி செல்கின்றனர்.