மொனாட்நாக்ஸ்!

சனி, 9 பிப்ரவரி 2008 (15:33 IST)
இயற்கை தனது பேரழகை கொட்டிக் கொடுத்துள்ள ஒரு மலைப்பாங்கான இடத்திற்கோ அல்லது மனத்தை கொள்ளை கொள்ளும் அழுகுடன் திகழும் ஆறும், அருவிகளும் தவழும் இடத்திற்கொ ஆண்டிற்கு ஒரு முறை சென்று தங்கி இளைப்பாறும் சுகத்தை பெறுவதே சுற்றுலா பயணத்தின் இனிய அனுபவமாகும்.

இப்படி திட்டமிட்டு சுற்றுலா செல்வதல்லாமல், ஏதாவது ஒரு பணி நிமித்தமோ அல்லது மற்றபடியோ நாம் எங்காவது பயணம் செல்லும்போது - பேருந்திலோ அல்லது ரயில் பயணத்திலோ திடீரென்று நமது கண்ணையும், கருத்தையும் ஒரே சேரக் கவரும் இயற்கைக் காட்சிகள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.
அப்படியொரு காட்சியை சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள்.

webdunia photoFILE
திருத்தணியைத் தாண்டி ஆந்திர மாநில எல்லைக்குள் நுழைந்ததும், நகரி பகுதியைக் கடக்கும் போது ஆங்காங்கு சில மலைகளைப் பார்ப்போம். தனித்து, தாவரங்கள் ஏதுமற்று, உதிர்ந்த பாறைகள் அடிவாரத்தில் குவியலாய் கிடக்க, ஒரு கல்லாய் உயர்ந்து நிற்கின்றன இந்த மலைகள்.

இவைகளின் உச்சிப்பகுதி மழ மழப்பாக, ஏதோ தேய்த்து தேய்த்து மழுப்பியதுபோல காணப்படும். இப்படிப்பட்ட மலைகள் நமது நாட்டின் கிழக்கு மலைத் தொடர்களோடு சேர்ந்ததவை. காலத்தால் இவைகளை மிக மூத்தவை என்று கூறுகிறது பூகோளவியல்.

மழையினாலும், வெய்யிலினாலும் நனைந்து பிறகு காய்ந்து - இப்படி பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடக்கும் இயற்கையின் சுழற்சியால் - இம்மலைகளின் மேல் பரப்பு வெடித்து பிறகு பிளந்து பின் சிறு சிறு பாறைகளாக உதிர்ந்து அடிவாரத்தில் குவியலாய் சேர்ந்திருக்க, அதன் நடுவிலிருந்து ஏதொ பொத்துக் கொண்டு மேலே வந்தது போலத் தோன்றிடும் தோற்றத்தை பெறுகின்றன.

இவைகளை மொனாட்நாக்ஸ் என்று கூறுகிறது பூகோளவியல். அதாவது கடின பாறைகளால் ஆகி துணையின்றி தனித்து நிற்கும் மலைகள்.

webdunia photoFILE
இப்படிபட்ட மலைகளில் தான் சில இடங்களில் நாம் ஆபூர்மான சிற தோற்றங்களைக் (சில நேரங்களில் மேகங்கள் காட்டும் ஜாலங்களைப் போல) காணலாம். இப்படி ஒரு மொனாட்நாக்ஸை கண்டுவிட்டு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் அபாரமாக கற்பனை செய்து (Close Encounters) பெரிய ஆள் ஆனது வேறு கதை!

இம்மலைகளில் இருந்து வெளியேறும் சிறு சிறு ஊற்றுக்கள் இவைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
பசுமையை ஆடையாகக் கொண்டு அழகை அள்ளிக் கொட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நேர் மாறாக இம்மலைகள் பழுப்பு அழகுடன் தங்களின் காலத்தின் தொன்மையை பறைசாற்றிக் கொண்டு நிற்கின்றன.

(இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்கத் தோன்றுகிறதா? எல்லாம் டிகிரியில் (இளம் பூகோளவியல்) படித்ததுதானப்பா)