The Call - இன்னொரு சைக்கோ கில்லர்

திங்கள், 13 ஜனவரி 2014 (11:21 IST)
ஹாலிவுட் சினிமாக்கள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. கலாபூர்வமான படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும், கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கும். கலாபூர்வத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் பூர்வஜென்ம பிரச்சனை என்பதால் அதை அப்படியே ஒதுக்கிவிட்டு கமர்ஷியலுக்கு வருவோம்.
FILE

ஹாலிவுட்காரர்களின் தொழில் அட்சர சுத்தம். லட்சம் ஆணடுகளுக்கு முன் இயற்கை பேரழிவால் இல்லாமல் போன டைனோசர்களை உயிர்ப்பிப்பது போல் எழுபது எம்எம்மில் ஃபிலிம் காட்டினாலும், அந்த டைனோசரை ஒரு கொசு கடிச்சது, கடிச்ச உடனே ஒரு மெழுகில் அகப்பட்டது, டைனோசரின் டிஎன்ஏ யுடன் அது இத்தனை வருசமா கெட்டுப் போகாமல் அப்படியே இருந்திச்சி என்று சயன்டிபிகலாக நம்மை முட்டாளாக்கி படத்தை ரசிக்க வைத்து கரன்சியை உருவிக் கொள்வதில் கில்லாடிகள்.

அப்படிதான் தொலைபேசி என்ற சாதனத்தை வைத்து ஐம்பது படங்களாவது எடுத்திருப்பார்கள். போன் பூத், செல்லுலார் போன்றவை அதில் பிரபலமானவை. இன்னும் என்னென்ன வகையில் இந்த தொலைபேசி என்ற வஸ்துவை காசாக்க முடியும் என்று மூளையை கசக்கிய ரிச்சர்ட் டி ஓவிடியோ எழுதி திரைக்கதை அமைத்த படம்தான் தி கால். தொலைக்காட்சி தொடருக்காக எழுதியதை எழுத்துப் பட்டறையில் தட்டி குறுக்கி 94 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக்கினார்கள்.
FILE

அமெரிக்காவில் 911 என்ற தொலைபேசி சேவை இருப்பது அமெரிக்கா போகாமல் சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில் மலிவுவிலை திருட்டு டிவிடி யில் ஹாலிவுட் படம் பார்க்கிறவர்களுக்கும் தெரிந்திருக்கும். ராத்திரி பூனை ஓடுகிற சத்தத்துக்கு பயந்தவர்களும் 911 எண்ணை தட்டி, ஹலோ ஐ யம் இன் ட்ரபிள் என்று சொல்வதை பார்த்திருக்கலாம். எல்லாவித அத்தியாவசியங்களுக்கும் நீங்கள் இந்த 911 எண்ணை பயன்படுத்தலாம். நம்மூர் 108 போல என்று வைத்துக் கொள்ளுங்கள். 108 ல் ஆம்புலன்ஸ் வரும். பதிலாக 911 ல் போலீஸ். 911 ல் பேசுகிற பெண்ணின் குரல் நன்றாக இருக்கே என ஜொள் விடுவதற்காக பேசினால் சட்டப்படி உங்களை உள்ளே தள்ளவும் முடியும்.

911 சேவையில் பணியாற்றும் ஜோர்டன் டர்னருக்கு ஒரு போன்கால் வருகிறது. தன்னுடைய வீட்டிற்குள் மர்ம நபர் நுழைய முயல்வதாக இளம்பெண் ஒருத்தி உயிர் போகிற பதற்றத்தில் பேசுகிறாள். அதை ஜோர்டன் கேட்கும் போதே மர்ம நபர் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்.
FILE

அடுத்து அதிரடியாக டேக்கன் நீயாம் நீஸனின் அவதாரத்தை எடுக்கும் ஜோர்டன் போனில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணிடம் மாடிக்கு போ, பெட்ரூமுக்குள் புகுந்துக்கோ, கட்டிலுக்கு அடியில் படுத்துக்கோ என்று இன்ஸ்ட்ரக்ஷன் தர, அந்தப் பெண்ணும் அப்படியே செய்கிறாள். உள்ளே புகுந்த மர்ம மனிதன் ஆளைக் காணாமல் அடுத்த நாள் கச்சேரியை வச்சுக்கலாம் என்று கிளம்புகிற நேரம்... ஏதாவது ட்விஸ்ட் வேண்டுமே. போன் தொடர்பு துண்டித்துப் போகிறது. ஜோர்டனின் சமயோஜித புத்தி சட்டென்று மழுங்கிப் போக அந்த பெண்ணின் போனுக்கு தொடர்பு கொள்கிறார். போன் ரிங் சத்தம் கேட்டு திரும்பி வரும் மர்ம மனிதனிடம் அந்தப் பெண் சிக்கிக் கொள்கிறாள். நோ... அந்தப் பெண்ணை எதுவும் செய்யாதே என்று போனில் ஜோர்டன் மர்ம மனிதனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அந்த மர்ம மனிதன் அந்த புகழ்பெற்ற பன்ச் டயலாக்கை சொல்கிறான். It's already done.

இது போன்ற சீரியல் கில்லர் ஹாரர் படங்களின் சிறப்பம்சம் கில்லர் ஆட்களை எப்படி தேர்வு செய்கிறான் என்பதும், போலீஸ்காரர்கள் எப்படி துப்பறிந்து படிப்படியாக கொலையாளியை நெருங்குகிறார்கள் என்பதும்.
FILE

கொலைக்கான காரணம் பெரும்பாலும் சப்பையாகவே இருக்கும். பூனை கண் காதலி ஏமாத்திட்டா அதுனால சைக்கோ பூனை கண் உள்ள பெண்களா தேடிப்பிடித்து கொன்றான் என்றோ, பத்து மணியானா கில்லரின் மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பிக்கும், யாரையாவது இழுத்துவச்சு கழுத்தை அறுத்தால்தான் மணிச் சத்தம் அடங்கும் என்றோ கதை அளப்பார்கள். இது மாதிரி ஒரு மயிர் பிளக்கும் பிரச்சனைதான் இந்தப் படத்திலும். சும்மா சொல்லலை. உண்மையிலே மயிருக்கு படத்தில் முக்கிய இடம் இருக்கிறது.

நாம் மேலே பார்த்தது சும்மா படத்தின் ஒரு அறிமுகக் காட்சி. பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் சடலம்...

நான்கு நாட்கள் கழித்து கண்டெடுக்கப்படுகிறது. ஜோர்டன் மூக்கை சிந்தி, தலையை பிடித்து பெண்ணை காப்பாற்ற முடியாத கழிவிரக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆறு மாதம் கழித்து அதே கில்லரிடம் இன்னொரு பெண் மாட்டிக் கொள்கிறாள். அந்த பலிகடா பெண் கில்லரின் கார் டிக்கியில் பயணித்தவாறே போனில் 911 க்கு தொடர்பு கொள்கிறாள். போனை அட்டெண்ட் செய்வது ஜோர்டன். மீண்டும் அதே டேக்கன்... அதே நியாம் நீஸன். காரின் பின்பக்க விளக்கை உடை, டிக்கியில் என்னென்ன இருக்கிறது பார்... என்ன பெயிண்ட் டின் இருக்கிறதா? அதை உடைத்து அப்படியே அந்த ஓட்டை வழியாக வெளியே ஊற்று... அந்தப் பெண்ணும் தேம்பி கொண்டே எல்லாம் செய்கிறது.
FILE

இதற்குப் பிறகு கதையைச் சொன்னால் படத்தைப் பார்க்கிறவர்களுக்கு படத்தின் கொஞ்ச நஞ்ச சுவாரஸியமும் போய்விடும். படத்தில் ஜோர்டனாக நடித்திருப்பவர் ஹலே பெர்ரி. சம்பளம் கம்மியாகவும் இருக்கணும், கொஞ்சம் பிரபலமாகவும் இருக்கணும் என்று தசாவதாரம் சயின்டிஸ்ட் கமல் மாதிரி தேடி ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் ஹாலே பெர்ரி. அம்மணிக்கு புஷ்டியெல்லாம் கழுத்துக்கு கீழே. அதை முழுக்க இழுத்துப் போர்த்தி ஒட்டிய முகத்தில் எவ்வளவுதான் ரியாக்ஷன் காட்டினாலும் நமக்கு சரிதான் போம்மா என்றாகிறது. ஆறுதலான விஷயம் கார் டிக்கியில் மாட்டிக் கொள்ளும் கேஸி என்ற அந்தப் பெண். 17 வயதான Abigail Breslin அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செம அழகு. படம் 60 மில்லியன் டாலர்கள் வசூலித்ததில் இவரின் பங்குதான் கணிசம் என்றால் யாரும் நம்பிப் போவார்கள்.

சென்ற வருடம் வெளியான இந்தப் படம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி பலத்த லாபத்தை தந்தது. 15 மில்லியன் செலவளித்து லாஸ் ஏஞ்சல்ஸின் சுற்றுவட்டாரத்தில் 25 நாட்களில் மொத்த படத்தை முடித்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சி தொடர்களாக எடுத்துத் தள்ளும் பிராட் ஆண்டர்சன்தான் படத்தின் இயக்குனர். பழக்கதோஷத்தில் இழுக்காமல் 94 நிமிடங்கள் பரபரவென படத்தை நகர்த்தியிருக்கிறார். இந்த பரபரதான் படத்தின் வெற்றியே.

வெப்துனியாவைப் படிக்கவும்