தி இ‌ண்டர்நேஷனல்

புதன், 1 செப்டம்பர் 2010 (19:05 IST)
FILE
ரன் லோலா ரன் படத்தின் மூலம் உலக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த இயக்குனர் டாம் டைக்வெரின் மற்றுமொரு படைப்பு தி இ‌ண்டர்நேஷனல். 1996இல் வெளியான பெர்ஃப்யூம் - தி ஸ்டோ‌ி ஆஃப் ஏ மர்டரர் படத்துக்குப் பிறகு 3 வருடங்கள் கழித்து தி இ‌ண்டர்நேஷனல் படத்தை டாம் டைக்வெர் இயக்குகிறார், முந்தையப் படங்களின் சாயல் துளியும் இன்றி முற்றிலும் வித்தியாசமாக.

இன்று அரசுகள் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதில்லை. பெரும் வர்த்தக நிறுவனங்கள்தான் ஒரு நாட்டின் கட்டுமானத்தை தீர்மானிக்கின்றன. அரசின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும், எதனை பிரதிபலிக்க வேண்டும் என்பதையெல்லாம் இவைதான் கட்டுப்படுத்துகின்றன.

இவற்றுள் முக்கியமானவை வங்கிகள். ஒரு நாட்டின் நிதி நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதில் வங்கிகளின் பங்கு அபாரமானது. ஒரு சர்வாதிகா‌ரிக்கு‌ரிய அதிகாரத்துடன் வங்கிகள் செயல்படுகின்றன. இந்த அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், வரைமுறையின்றி அதிக‌ரிக்கவும் சில வங்கிகள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகின்றன. கட்டுப்பாடற்ற இந்த பாய்ச்சல் ஆர்கனைஸ்டு கிரைம் எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு முகாந்திரம் அமைத்துக் கொடுக்கின்றன. டாம் டைக்வெர் தனது படத்தில் இதனை வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

உலகின் ஐந்தாவது பெ‌ரிய வங்கியான ஐபிபிசி போருக்கான ஆயுதங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது. முக்கியமாக ஏவுகணைகள். இந்த ஏவுகணைகளை வாங்கி சி‌ரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு வழங்க ஐபிபிசி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்யவிருப்பது இத்தாலி ஆயுத வியாபா‌ரியான கால்வினி. இவர் இத்தாலியின் அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என கணிக்கப்பட்டிருப்பவர்.

வங்கியின் செயல்பாடுகளால் அதிருப்தியுறும் கால்வினி ஏவுகணை வழங்க தயக்கம் காட்டுகிறார். இந்நிலையில் வங்கியின் உயர் அதிகா‌ி அகமது சுனாய் விபத்தில் இறக்கிறார். அவரது மரணத்துக்கு காரணம் விபத்தல்ல, வங்கியே என்பது கால்வினிக்கு தெ‌ரிய வருகிறது. ஐபிபிசி, கால்வினி ஒப்பந்தத்துக்கு காரணமாக இருந்தவர் கால்வினியின் நண்பரான சுனாய். தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் வங்கி ஏற்பாடு செய்த கொலையாளியால் கால்வினியும் கொல்லப்படுகிறார்.

கால்வினியின் மரணத்துக்கு காரணம் வங்கியே என்பது அவரது மகன்களுக்கு தெ‌ரிய வருகிறது. இதனால் வங்கிக்கு புதிய நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் ஏவுகணைகளை சப்ளை செய்யாவிட்டால் வங்கி திவாலாகிவிடும். இதனால் வங்கி‌த் தலைவர் ஸ்கார்சன் கால்வினியின் போட்டி கம்பெனியின் உதவியை நாடுகிறார். துருக்கியைச் சேர்ந்த இந்தக் கம்பெனியின் பிரதான வாடிக்கையாளர் இஸ்ரேல். துருக்கி கம்பெனி வங்கிக்கு ஏவுகணைகள் சப்ளை செய்ய முன் வருகிறது. ஆனால் அந்த ஏவுகணைகளை எதிர்க்கக் கூடிய ஆயுதங்களை ஏற்கனவே அக்கம்பெனி இஸ்ரேலுக்கு விற்றுள்ளது.

இந்த விவரம் தெ‌ரிந்தால் சி‌ரியாவும், ஈரானும் ஏவுகணைகள் வாங்குவதில் இருந்து பின்வாங்கும். வங்கி மிகப்பெ‌ரிய இக்கட்டில் மாட்டிக் கொள்ளும். இந்த ரகசியத்தை அம்பலப்படுத்த இ‌ண்டர்போல் அதிகா‌ி எடுக்கும் முயற்சி கைகூடாமல் போகிறது. கோபத்தில் வங்கி‌த் தலைவர் ஸ்கார்ஸனை அவர் துரத்த, இடையில் வரும் கால்வினியின் மகன்களால் நியமிக்கப்பட்ட கொலையாளி ஸ்கார்சனை சுட்டுக் கொல்கிறார்.

இந்த‌க் கதை இ‌ண்டர்போல் அதிகா‌ி சேலிங்கர் நடத்தும் விசாரணையின் வழியாக சொல்லப்படுகிறது. ஒரு வங்கி எதற்கு தனது பணத்தை ஏவுகணை பிசினஸில் முதலீடு செய்ய வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்டர்போல் அதிகா‌ி சேலிங்கர் தனது விசாரணையை மேற்கொள்கிறார். வங்கியின் சட்டவிரோத போக்கை நிரூபிக்க அவருக்கு நம்பிக்கையான ஆள் ஒருவர் கிடைக்கிறார். ஆனால் மர்மமான முறையில் அந்த நபரும் அவரது குடும்பமும் கொல்லப்படுகிறது. சேலிங்க‌ரின் சந்தேகம் உறுதியாகிறது.

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு பணம் வரும் வழிகளை ஆராயும் அமெ‌ரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தை சேர்ந்த எலானர் விட்மேன் - சுருக்கமாக எல்லா - சேலிங்கருடன் இணைந்து வங்கியின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார். இதில் எல்லாவின் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார்.

FILE
இந்த‌க் கொலையில் இருந்துதான் படம் தொடங்குகிறது. ரன் லோலா ரன் படத்தில் கேமராவை அதிவேகமாக பயன்படுத்திய டாம் டைக்வெர் இந்தப் படத்தில் ஆழ் கடலின் அமைதியுடன் காட்சிகளை விவ‌ரிக்கிறார். வழக்கமான ஹாலிவுட் கமர்ஷியல் படங்களின் கிளிஷேக்கள் இந்தப் படத்தில் இல்லை. ஆனால் அந்தப் படங்களைவிட மிக விறுவிறுப்பாக செல்கிறது தி இ‌ண்டர்நேஷனல். குறிப்பாக வங்கி ஏற்பாடு செய்யும் கொலையாளியை சேலிங்கரும் எல்லாவும் கண்டுபிடித்து பின் தொடரும் காட்சிகள்.

ஒரு வங்கி மலிவு ரக ஆயுதங்களை பிற நாடுகளுக்கும், போராளி குழுக்களுக்கும் சப்ளை செய்வதன் மூலம் எப்படி நிதி நிர்வாகத்தை கட்டுப்படுத்துகிறது என்பது இந்தப் படத்தில் தெ‌‌ளிவாக‌க் கூறப்பட்டுள்ளது. ஆப்பி‌ரிக்காவிலுள்ள ஒரு போராளிக்குழு தலைவருடன் வங்கியின் தலைவர் ஸ்கார்சன் பேசுகிறார். நாங்கள் உங்களுக்கு என்னவிதமான ஆயுத உதவிகளையும் செய்ய‌த் தயாராக இருக்கிறோம் பதிலுக்கு உங்களது அரசு அமைந்ததும் உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை எங்கள் வங்கி கட்டுப்படுத்தும் என பேரம் பேசுகிறார்.

இந்தப் படத்தின் இரண்டாவது முக்கிய சேதி, இதுபோன்ற வங்கிகளை சட்டத்துக்கு உ‌ட்பட்டு எதுவும் செய்ய முடியாது என்பதும், வங்கியின் அதிகா‌ரிகளை சட்டத்துக்கு புறம்பாக தண்டிக்க முடிந்தாலும் வங்கியின் செயல்பாட்டை ஒருபோதும் தடை செய்ய முடியாது என்பதுமாகும்.

ஸ்கார்சன் கொல்லப்பட்டாலும் அவரது இடத்துக்கு வரும் புதிய தலைவரால் ஆயுத பரவலும், வன்முறையும் அதிக‌ரிக்கிறது. அப்படி அதிக‌ரிப்பதை சுட்டிக் காட்டும் பத்தி‌ரிகை செய்தியுடன் படத்தை முடித்துக் கொள்கிறார் டாம் டைக்வெர்.

ஆனால் ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதனின் சிந்தனையும் இந்த முடிவில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்