குழந்தைகளின் உளவியலை ஆராயும் த்ருஃபோவின் திரைப்படங்களிலிருந்து பல வகைகளில் மாறுபட்டவை ஈரானிய திரைப்படங்கள். குழந்தைகளின் அக உலகிற்கு இணையாக நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை ஈரானிய திரைப்படங்கள்.
இதற்கு பொருத்தமான திரைப்படம் என்று இயக்குனர் மஜித் மஜிதியின் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படத்தை கூறலாம். 1987-க்குப் பிறகு ஈரானிய பண்பாட்டுத்துறை திரைப்படங்களுக்கு ஆதரவளிக்கும் சில விதிமுறைகளை உருவாக்கியது. இந்த சுதந்திரப் பின்னணியில் உருவான மசூத் கிமியாய், நாசர் டக்வாய், அப்பாஸ் கியாரஸ்தமி ஆகிய இயக்குனர்கள் உலகத்தரமான திரைப்படங்களை இயக்கினர். இவர்களின் தாக்கத்தால் பல இளம் இயக்குனர்கள் ஈரானிய சினிமாவுக்கு வளம் சேர்த்தன. அவர்களில் முக்கியமானவர் இயக்குனர் மஜித் மஜிதி.
1997 ம் வருடம் இவர் இயக்கிய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் மான்டரில் உலகத் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை பெற்றது. இந்தப் படம் ஏற்படுத்திய அதிர்வு 3 நாட்கள் தன்னை தூங்க விடாமல் செய்ததாக கூறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். தனக்குப் பிடித்தமான பத்து திரைப்படங்களில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பாலுமகேந்திரா.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம் அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், ஒரு சிறுமியையும் பற்றியது.
webdunia photo
WD
அலி எனும் சிறுவன் தனது தங்கையின் கிழிந்த ஷுக்களை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான் அலி. உருளைக்கிழங்கு வாங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே ஷுவை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் ஷுவையும் எடுத்துச் செல்கிறான்.
ஷு தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என தங்கை ஜாராவிடம் கூறுகிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. அலியின் தாய் குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர அவள் நோயாளியும்கூட. அலி, ஜாராவின் தந்தையோ நிரந்தர வேலையில்லாதவர். ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பவர்.
அண்ணனும், தங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் ஷு வை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து ஷு வை வாங்கி அணிந்து சென்றால் ஷு தொலைந்ததை தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.
தனக்குப் பொருந்தாத அண்ணனின் பெரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. மற்ற குழந்தைகளின் பளபளப்பான காலணிகள் அவளிடம் வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தை மனதில் தோற்றுவிக்கிறது. மேலும் ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் ஷுவை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது.
அப்படியும் வகுப்பு தொடங்கிய பிறகே ஒவ்வொரு நாளும் அலியால் பள்ளி செல்ல முடிகிறது. தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியரின் பரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.
இதனிடையில் தொலைந்து போன தனது ஷுவை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெரியாதவர் என்பது தெரிந்ததும் அண்ணனும் தங்கையும் ஏதும் பேசாமல் மவுனமாக வீடு திரும்புகிறார்கள்.
இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் 3வதாக வருகிறவர்களுக்கு பரிசு ஒரு ஜோடி ஷு என்பது தெரிய வந்ததும் ஆசிரியரிடம் மன்றாடி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் 3 வதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் ஷுவை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜதை ஷு வாங்கித் தருவதாக வாக்களிக்கிறான்.
webdunia photo
WD
பந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு ஷுவை கொடுக்க ஓடிவரும் சத்தமும், ஷு தொடர்பான அவர்களது உரையாடலும் ஒலிக்கிறது. இறுதியில் போட்டியில் 3 வதாக வருவதற்குப் பதில் முதலாவதாக வருகிறான் அலி. தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசிரியரிடம் நான் 3வதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான்;. மூன்றாவதா..? முதல்பரிசே உனக்குத்தான் என்கிறார் ஆசிரியர். அந்த சிறுவனின் முகம் வாடிப் போகிறது.
வீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் தொங்கிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் ; கேட்க, அவள் உள்ளே செல்கிறாள்.
அலியின் ஷு இப்போது நைந்து கிழிந்து போயிருக்கிறது.தொட்டியின் அருகே அமர்ந்து அவற்றை கழற்றுகிறான். ஓட்டப் பந்தயம் அவன் கால்களில் பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வலியும் ஏமாற்றமும் ஒரு சேர தனது கால்களை தொட்டியில் விடுகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை தங்க நிற மீன்கள் சுற்றி முத்தமிடுவதுடன் படம் நிறைவடைகிறது.
சிறுகதைக்குரிய கச்சிதத்தையும், கவிதைக்குரிய கவித்துவத்தையும் மஜித் மஜிதியின் இப்படம் ஒருசேர கொண்டிருப்பது இதன் சிறப்பு என கூறலாம்.
குழந்தைகளின்பால் கருணை பெருக்கெடுக்க சராசரியான இயக்குனர்கள் கையாளும் எந்த யுக்தியையும் மஜித் மஜிதி கையாளவில்லை. படத்தில் யாரும் குழந்தைகளை இம்சிப்பதில்லை, கொடுமைப்படுத்துவதில்லை. மாறாக உதவி செய்கிறார்கள், நேசிக்கிறார்கள். இருந்தும் அந்த குழந்தைகளின் மீதான துயரம் பனியாக நம்மீது படர்கிறது. குழந்தைகளின் களங்கமின்மை, அன்பின் வெளிப்பாடுகள், மனித நேயம் ஆகியவை சில்ட்ரன் ஆஃப் ஹெவனை எல்லோருக்குமான திரைப்படமாக மாற்றுகிறது.
குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக அதே நேரம் தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலை அமைதி கெடாமல் சொல்கிறது மஜித் மஜிதின் இப்படம். அதனால்தான், அலி, ஜாராவை சந்திக்கும் இறுதி காட்சிக்கு முன், அவர்களின் தந்தை இருவருக்கும் ஷு வாங்கும் காட்சி காட்டப்பட்ட பின்பும் பார்வையாளர்கள் பதட்டம் குறையாமல் அந்த குழந்தைகளின் துயரத்தில் பங்கெடுக்கிறார்கள்.
உறுதியாக, நிச்சயமாக சொல்லலாம்... குழந்தைகளைப் பற்றி வந்த சிறந்த திரைப்படங்களில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் ஒன்று.